பொது

அந்நிய தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வீர் - எம்டியூசி

29/05/2020 06:17 PM

கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா) -- முதலாளிமார்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமிக்கும்போது மனித உரிமைக்கான அடிப்படைத் தேவைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். 

கடந்த சில தினங்களாக, அந்நிய தொழிலாளர்களை உட்படுத்திய கொவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, வேலையிடங்களில், அரசாங்கம் விதித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறையை அவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் ஜே. சாலமன் வலியுறுத்தியிருக்கிறார். 

பணியிடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்படுவது மட்டுமின்றி அந்நிய தொழிலாளர்களுக்கு கொவிட் 19 நோய் தொடர்பான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாலமன் தெரிவித்திருக்கிறார். 

அதுமட்டுமின்றி, அத்தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் முறையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் முதலாளிமார்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தங்களது பணியார்களைக்கு செய்து கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

அந்நிய தொழிலாளர்களை கூட்டம் கூட்டமாக கொங்சி வீடுகளிலோ அல்லது தங்குமிடத்தில் வைத்திருப்பதால், கொவிட்-19 நோய்த் தொற்று வேகமாக பரவியதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் சாலமன் சுட்டிக் காட்டினார். 

இதனிடையே, அந்நிய தொழிலாளர்களுக்கு மட்டுமே கொவிட்-19 நோய் பரவும் என்ற மெத்தனப் போக்குடன் இருக்காமல், மனிதவள அமைச்சு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார். 

-- பெர்னாமா