அரசியல்

டாக்டர் மகாதீர் உட்பட ஐவரின் உறுப்பினர் தகுதி நிறுத்தப்பட்டது - ஹம்சா ஜைனுடின்

29/05/2020 08:04 PM

கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உட்பட ஐந்து பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படவில்லை. 

அவர்கள் கட்சிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையினால் அவர்களின் உறுப்பினர் தகுதி நிறுத்தப்பட்டிருப்பதாக, பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர், டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுடின் தெளிவுப்படுத்தியிருக்கிறார். 

கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் எதிர்கட்சி அணியில் அமர்ந்தது, மட்டுமின்றி, பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினை பதவியில் இருந்து நீக்குவதற்கு தமது வெளிப்படையான ஆதரவை டாக்டர் மகாதீர் வழங்கியதாகவும் ஹம்சா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

துன் டாக்டர் மகாதீருடன், டத்தோ ஶ்ரீ முக்ரீஸ் மகாதீர், டத்தோ அமிருடின் ஹம்சா, மஸ்லி மாலிக் மற்றும் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் உறுப்பினர் தகுதி நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதனிடையே, தாம் இன்னும் பெர்சத்து கட்சியின் தலைவர் என்று துன் டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார். 

பெர்சத்து கட்சியில் பணிச் செயலாளர் எனும் பதவி இல்லாததால், தாம் உட்பட ஐவரின் உறுப்பினர் நீக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று என்றும் அவர் சாடியிருக்கிறார். 

-- பெர்னாமா