சிறப்புச் செய்தி

பிகேபி அமலாக்கத்தால் மக்கள் எதிர்கொள்ளும் தாக்கங்கள்

29/05/2020 08:19 PM

கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா)-- கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கமும் அதனால் அமலுக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் புதிய இயல்பு முறையை அறிமுகம் செய்திருக்கிறது. 

புதிய இயல்பினால், நன்மைகள் பல இருந்தாலும், அதற்கு ஈடான இழப்புகளும் கஷ்டமான சூழ்நிலைகளும் ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது. ஜனனம் தொடங்கி மரண சம்பவங்கள் வரை குடும்ப உறவுகளும் அவர்களின் உணர்வுகளும் இக்காலக்கட்டத்தில் பெரும் சோதனையையும் சவாலையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. 

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில், வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் அதிகமான மலேசியர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாகி இருக்கிறது. 

இதில், நமது அண்டை நாடான சிங்கப்பூரில் சிக்குண்டு வாழும் நிறைய பேர், கணவன்- மனைவியுமாக,  பெற்றவர்கள் - பிள்ளைகளுமாக தங்களின் அன்புக்குரியவர்களைக் காண முடியாமல், உணர்வு போராட்டங்களில் சிக்கித் தவித்து வருபவர்களுக்கு காணொளி அழைப்புகளே ஆறுதலாக அமைந்துள்ளன. 

அதோடு, பிரசவக் காலத்தில் உடனிருக்க வேண்டியவர்கள் இல்லாதபோது அவ்வுணர்வுகள் உயிர்நாடியைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துதான் போகும். ஆண்டுக்கு ஒரு முறை வரும் அன்னையர் தினம் கூட, சில பிள்ளைகளுக்கு இங்கு வெறுமையான உணர்வுகளைத் தந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

 இச்சூழ்நிலைகளை ஜீரணித்துக் கொண்டு சிலர், தங்களின் பணியைத் தொடர் இன்னும் சிலர் வேலை இழந்தது அவதியுறும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. 

பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து, மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு உறவுகளின் அனுசரனையே குடும்பத்தின் ஆணிவேராகும். ஆனால், இதுபோன்ற காலக்கட்டங்களில், அந்த உறவுகளைப் பிரிந்தும் தனித்தும் வாழ்வது, மன ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்நிலை கூடிய விரைவில் சீரடைந்து வழக்க நிலைக்கு திரும்பும் என்றும் அவர்கள் பெரிதும் நம்புகின்றனர். 

-- பெர்னாமா