சிறப்புச் செய்தி

ஈன்றெடுத்த குழந்தைகளுக்கு பெற்றவர்களே எமனாகும் அவலம்

07/08/2020 08:48 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பிள்ளை செல்வம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். குழந்தை செல்வத்திற்காக கோயில்கள், பரிகாரங்கள், மருத்துவமனைகள் என தவமாய் தவமிருக்க, பெற்றோர்களே தாங்கள் ஈன்றெடுத்த குழந்தைகளுக்கு எமனாகும் அவலமும் உண்டு. மறதி மற்றும் அலட்சிய போக்கினால் அந்த பிஞ்சு ஜீவன்களின் உயிர் பறிப்போக பெற்றவர்களே காரணமாக இருப்பது வேதனையிலும் வேதனை.

நாட்டில், 2018-ஆம் தொடங்கி இதுவரையில், காரில் விட்டுச் செல்லப்பட்டதால் மரணம் அடைந்த சிறார்களின் எண்ணிக்கை ஆறாக பதிவாகியுள்ளது.

இது ஒரு திட்டமிடப்படாத செயல் என்றாலும், இவ்வலட்சிய போக்கையும் அதனால் ஏற்படும் விளைவையும் கடுமையான குற்றமாகவே உலகம் வகைப்படுத்துகிறது. அதிலும், குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதனை கலையும் பொருட்டு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டும் வருகின்றன.

குழந்தைகளை காரில் தனியாக விட்டுச் செல்லும்போது அவர்களின் உடல் விரைவில் வெப்பமடைந்து பக்கவாதம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. ஒரு குழந்தையின் உடல் பெரியவரின் உடலை காட்டிலும் மூன்று முதல் ஐந்து மடங்கு வேகமாக வெப்பமடைகிறது. இதனால், குழந்தையின் முக்கிய உடல் உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கி மூச்சி திணறி அவர்கள் மரணமடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

அதுவும், மலேசியா போன்ற அதிக வெப்பமான நாடுகளில் இதன் பாதிப்பு குழந்தைகளுக்கு கூடுதலாகவே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.    

கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவங்கள் 6 மட்டுமே என்றாலும்கூட, பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவதால் அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. 

குழந்தைகளை காரினுள் விட்டுச் செல்கின்ற பெற்றோர்களுக்கு வேலை பளு, பொருளாதார சிக்கல், குடும்ப பிரச்சனை மற்றும் பல காரணங்களினால் ஏற்படும் மன உளைச்சலே, இம்மாதிரியான சம்பவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்திருக்கிறது. ஆனால், சிலர் இதற்கு மாற்று கருத்தையும் முன்வைத்திருக்கின்றனர்.

''இது நம் பிள்ளைகள். நாம்தான் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். காரில் நீங்கள் அவர்களை விட்டுச் செல்கிறீர்கள். இது மிகப் பெரிய ஆபத்தான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது'', என்று ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சி நிர்வாகி ஜேம்ஸ் ராஜ் தெரிவித்தார். 

அதோடு, ''நமக்கு எவ்வித மன உளைச்சல் இருந்தாலும் நம்முடைய முக்கியமான கடமைகளை என்றும் மறக்காமல் முக்கியத்துவம் வழங்க வேண்டும். குறிப்பாக கைக்குழந்தைகள் என்பவர்கள் மிகவும் மென்மையானவர்கள்; காரில் அழுதாலும் அது யாருக்கும் கேட்காத நிலை ஏற்பட்டு எதிர்ப்பாராத அசம்பாவிதம் ஏற்படுகிறது'', என்று தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை பொறுப்பாளர் சாந்தி பெரியசாமி கூறினார்.   

அதே தனியார் நிறுவனத்தில் நிறுவன நிர்வாகியாக பணிப்புரியும் மாலதி எம்.கே. கருப்பையா இவ்வாறு குறிப்பிட்டார், ''பிள்ளைகளுக்காகத்தான் உழைக்கிறோம். இது போன்ற அலட்சியப்போக்கு மன்னிக்க முடியாத ஒரு குற்றம்''.  

மேலும் இக்குற்றத்திற்கு, அதிகபட்ச சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்துவது அல்லது 20,000 ரிங்கிட்டில் இருந்து 50,000 ரிங்கிட்டாக அபராதத் தொகையை அதிகரிப்பது, அல்லது அவ்விரண்டுமே விதிப்பது, மற்றும் சமூக சேவையைக் கட்டாயத் தண்டனையாக விதிப்பது ஆகியவற்றை அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், இத்தண்டனை போதாது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

''நாம் அவர்களை காரில் மறந்து விட்டு வருவதற்கு அவர்கள் பொருட்கள் அல்லர். பெற்றெடுத்த பிள்ளைகளைக் காப்பது பெற்றோரின் கடமை. என்னை பொறுத்த வரையில் இந்த குற்றத்தைப் புரிபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்'', என்று கருத்தை ஒரு தனியார் நிறுவன தலைமை செயல்திட்ட அதிகாரியான செல்வமலர் செல்வராஜு கண்டித்து கூறினார்.  

இதுபோன்ற வேதனையளிக்கும் சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில், பெற்றவர்கள் தங்களின் முக்கிய பொருட்களான கைப்பை, மடிக்கணினி மற்றும் தங்கள் பணிக்கு தேவையான பொருட்களை காரின் பின்இருக்கையில் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதன்வழி, பின்இருக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் தங்களின் குழந்தைகளை எக்காரணத்திற்காகவும் மறப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போதைய காலகட்டத்தில் பிள்ளை வரம் என்பது அனைவருக்கும் எளிதில் அமையாத ஒன்றாகிவிட்டது. ஆகவே, பிள்ளை செல்வங்களைப் பெற்றவர்கள், அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் வழங்கி பேணி காக்க வேண்டும். 

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதற்கேற்ப, காலம் கடந்து வருந்தி பயன் இல்லை என்பதை சிந்தையில் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். தலைமுறை காப்போம்.

-- பெர்னாமா