உலகம்

சில உலக செய்திகளின் தொகுப்பு

08/08/2020 06:36 PM

பெய்ரூட், 8ஆகஸ்ட் (பெர்னாமா) -- வெடிச் சம்பவம் நிகழ்ந்த லெபனான், பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் இன்று சனிக்கிழமை ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்களை மீட்கவும் இடிபாடுகளை அப்புறப்படுத்தவும் உலகவும் முழுவதும் உள்ள மீட்பு பணியாளர்கள் லெபனான் தலைநகரில் கூடியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இக்கோரச் சம்பவத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியா 

இந்தியா, கேரளாவில் பெய்து வரும் கனத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தேயீலை தோட்ட பணியாளர்களின் 20 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாக அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 பேர் காப்பாற்றப்பட்டிருக்கும் நிலையில் இச்சம்பவத்தில் காணாமல் போன 70 பேர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. 

இந்தியா 

இந்தியாவில் இதுவரை, 2 லட்சத்து 91 ஆயிரத்து 416 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, 42 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்திருப்பதோடு, 14 லட்சத்து 29 ஆயிரத்து 100 பேர் குணமடைந்திருக்கின்றனர். 

மொரிஷியஸ் 

ஜப்பானுக்கு சொந்தமான கப்பலில் இருந்த எண்ணெய், டன் கணக்கில் கடலில் கசிந்ததைத் தொடர்ந்து, மொரிஷியஸ் தனது கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை "சுற்றுச்சூழல் அவசரகால நிலையை'' அறிவித்தது. எம்.வி வகாஷியோ கப்பல் 4,000 டன் எண்ணெய்யை ஏற்றிச் சென்றதாகவும், கப்பலின் பாகத்தில் ஏற்பட்ட விரிசலினால், எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும் மொரிஷியஸ் தகவல் வெளியிட்டது. இவ்விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை, ஒரு கோடியே 95 லட்சத்து 49,901 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நோயினால் இதுவரை, ஏழு லட்சத்து 24 ஆயிரத்து 186 பேர் உயிரிழந்திருப்பதோடு, ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 631 பேர் குணமடைந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா