பொது

மக்களுக்கு ஏதுவான சுவாசக் கவசங்கள்

10/08/2020 07:18 PM

கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மக்களைச் சுமைப்படுத்தாமல், பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு உகந்த சில வகையிலான சுவாசக் கவசங்களைச் சுகாதார அமைச்சுக்கு அரசாங்கம் பரிந்துரை செய்திருக்கிறது. 

இதுவரை, துணியில் சுயமாக தயாரிக்கப்படும் சுவாசக் கவசம் உட்பட மூன்று பரிந்துரைகள் சுகாதார அமைச்சிடம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

தங்களின் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளும் வகையில் பெண்கள் அணியும் பர்தா மற்றும் FACE SHIELD எனப்படும் முகக் கவசம் ஆகியவை இதர இரண்டு பரிந்துரைகள் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார். 

இதனிடையே, கொவிட்-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி இருக்கும் மாநிலத்தைக் கடந்து செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.. இலக்கிடப்பட்ட கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் மட்டுமே அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தும் என்றும் இஸ்மாயில் கூறினார். 

கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட பகுதிகள், அரசாங்கம் வெளியிட்டிருக்கும் 342 சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அச்சட்டத்தை மீறினால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். 

--பெர்னாமா