2021 வரவு- செலவு திட்டம் மக்களுக்கு முக்கியதுவம் வழங்கும் - மைக்கி நம்பிக்கை

17/10/2020 07:53 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

2021-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு வரைக்குமான 12-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும், முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் உட்பட 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அமையும் என்று, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர், டத்தோ டாக்டர் ஏ.டி. குமரராஜா தெரிவித்திருக்கிறார்.

கொவிட்-19 நோயின் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் நெருக்கடியை சந்தித்திருப்பதால் அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி உதவிகள், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பயிற்சி திட்டங்கள் நடத்துவதற்கு ஒத்துக்கீடு, அரசு நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் ஆகிய கோரிக்கைகளை மைக்கி முன் வைத்திருக்கிறது,''  டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா தெரிவித்தார்.

கடந்த வாரம் நிதி அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை மைக்கி முன் வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, PRIHATIN, PENJANA உட்பட இதுவரை அரசாங்கம் ஐந்து பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் வழி 30,500 கோடி ரிங்கிட்டை வழங்கியிருப்பதை ஏ.டி.குமரராஜா சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்களின் வழி மலேசியர்கள் நன்மை அடைந்திருந்தாலும் இதில் குறிப்பிட்ட சில திட்டங்களை அரசாங்கம் அடுத்த ஆண்டும் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியர்கள் மட்டுமல்லாது மலேசியர்கள் நன்மையடைக்கூடிய வகையில் இந்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அமையும் என்றும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குமரராஜா கூறினார்.

-- பெர்னாமா