விளையாட்டு

டென்மார்க் பொதுப் பூப்பந்து போட்டி : ஏண்டர்ஸ் அந்தோசென் வெற்றி

19/10/2020 03:51 PM

ஒடென்ஸ், 19 அக்டோபர் (பெர்னாமா) -- டென்மார்க், ஒடென்ஸ் நகரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டென்மார்க் பொதுப் பூப்பந்து போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி சுற்றில் டென்மார்க்கின் ஏண்டர்ஸ் அந்தோசென் வெற்றிப் பெற்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் இறுதி சுற்றில், ஜப்பானின் நொசோமி ஒகுஹாரா வாகை சூடினார். 23 வயதுடைய அன்டன்சன் தமது சக நாட்டவரான ராஸ்மஸ் ஜெம்கேவை 18-21, 21-19, 21-12 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார்.இவ்வாட்டம் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களுக்கு நீடித்தது.

இதனிடையே, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஒலிம்பிக் வெற்றியாளர் கரோலினா மரின், 2017-ஆம் ஆண்டு உலக வெற்றியாளர் நொசோமி ஒகுஹாராவிடம் தோல்வி கண்டார்.

56 நிமிடங்களுக்கு நீடித்த இவ்வாட்டத்தில் 21-19, 21-17 என்ற நேரடி செட்களில் கரோலினாவை வீழ்த்தி நொசோமி பட்டத்தை வென்றுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண ஆட்டம் ஒன்றில், மேற்கு ஹாம் 3 -3 என்ற கோல்களில் டோட்டன்ஹாமுடன் சமநிலை கண்டது.

பிரேசிலைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் எட்வர்டோ கோப்ரா அந்நாட்டின் காற்பந்தாட்ட ஜாம்பவான் பேலேவின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலோர நகரமான சாண்டோசில் அவரின் சுவரோவியத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இரண்டு மாத ஆராய்ச்சி மற்றும் 45 நாட்கள் உழைப்புக்குப் பிறகு, 800 சதுர மீட்டர் ஓவியத்தை கோப்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுச் செய்தார். வரும் அக்டோபர் 23-ஆம் தேதி உலக காற்பந்து நட்சத்திரமான பேலேவுக்கு 80 வயது பூர்த்தியாகிறது.

--பெர்னாமா