அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு அம்னோ ஆதரவு தொடருமா?

19/10/2020 05:15 PM

கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவிருக்கிறது.

பகாங்கில் நடைபெறவுள்ள அக்கட்சியின் உச்சமன்றக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக இன்றிரவு அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் கூறுகிறது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சிறுபான்மையாக இருக்கும் பெர்சத்து கட்சியின் கையே ஓங்கியுள்ளது. 

அக்கூட்டணியில் அம்னோ  ஓரங்கட்டப்படுவதும் அம்னோவை மேலும் வெறுப்படையச் செய்துள்ளது.

''நாங்கள் ஒன்றும் நொண்டிக் குதிரைகள் அல்ல, எங்களுக்கு உரிய அங்கிகாரத்தை உடனடியாக வழங்குங்கள்,'' என்று 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அம்னோ, முகிடினுக்கு எதிராக சூசகமாக போர் கொடி தூக்கியுள்ளது நாடறிந்த உண்மை.

அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு எப்படியும் அமையலாம்.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்ளலாம் அல்லது நிபந்தனையுடன் கூடிய ஆதரவை தொடர்ந்து வழங்கலாம்.

இரண்டில் ஒன்று நாளை தெரிந்துவிடும்.

ஆதரவை மீட்டுக் கொண்டால் நாடாளுமன்றத்தில் அம்னோ எதிர்கட்சியாக செயல்படும்.

தமக்கு எதிராக 16 நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்னோ கொடுத்து வரும் நெருக்குதலை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் முகிடின் உள்ளார்.

தொடர்ந்து ஆட்சி புரிந்து வருவதற்கு, மக்களவையில் தமக்கு போதுமான ஆதரவு இருப்பதை முகிடின் நிரூபித்தாக வேண்டும்.

தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாததால், அம்னோவுக்கு சாதகமான அமைச்சரவையை மாற்றி அமைக்கும்  நிர்பந்தத்திற்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையாக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே முகிடின் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்து : எம்.விவேகானந்தன்

எழுத்தாளர் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு நிலையிலான அரசாங்க பணிகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கில ஊடகங்களிலும் இவரது அரசியல் கண்ணோட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். பெர்னாமாவின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை

-- பெர்னாமா