உலகம்

கொவிட்-19: பெருநாட்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசாங்கம் வலியுறுத்து

21/10/2020 11:32 AM

புது டெல்லி, 21 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவில் பெருநாட்காலம் தொடங்கவிருப்பதால், கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பெருநாட்காலத்தில், தொடர்ந்து தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதோடு, தங்களின் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

''தடுப்பு மருந்து கிடைக்கும்வரை, நாம் உறுதியை இழந்து விடக்கூடாது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனிதர்களைக் காப்பாற்ற உலகளவில் பணிகள் நடந்து வருகின்றன,'' என்று அவர் கூறினார்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவில் சென்றடைவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில், பொருளாதாரத் துறைகள் முடங்கிக் கிடந்த நிலையில், பெருநாட்காலம் தொடங்கவிருப்பதால், தற்போது அனைத்து துறைகளும்  மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இம்மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் கொண்டாடப்படவிருக்கும் முக்கிய பெருநாட்களின்போது, மக்கள் ஒன்றுகூடினால் இந்நோய் அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பெருநாட்காலத்தில், சுவாசக் கவசம் அணியாமலும், தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் மக்கள் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டால், தற்போதிருக்கும் குளிர்காலத்தில் இந்நோய் நாட்டில் மிக வேகமாக பரவ வாய்ப்பிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்நோய்க் கண்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கடந்த மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் அது கணிசமாக குறைந்து வருகிறது.

அந்நாட்டில், செவ்வாய்க்கிழமை, கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு மிக குறைவான அதாவது 46,000 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது.

-- பெர்னாமா