பொது

சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு தொடர்பில் எண்மர் கைது

21/10/2020 06:41 PM

செலாயாங், 21 அக்டோபர் (பெர்னாமா) --சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுப்புக் காவல் உத்தரவை பெறுவதற்காக நிறுவன இயக்குநர் ஒருவர் அவரின் தந்தை உட்பட எண்மர் நாளை வியாழக்கிழமை செலாயாங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.

31 வயதுடைய நிறுவன இயக்குநர், 62 வயதுடைய அவரின் தந்தை, இரண்டு உள்நாட்டு ஊழியர்கள் மற்றும் நான்கு நேபாள ஊழியர்கள் ஆகிய அனைவரும் ரவாங்கில் இன்று காலை 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் டத்தோ ஃபாட்சில் அஹ்மட்  தெரிவித்திருக்கிறார்.

சுங்கை சிலாங்கூரில் சுத்திகரிக்கப்படாத நீர்வளத்தில் துர்நாற்றம் ஏற்பட்டதை, AIR SELANGOR தரப்பினர் அடையாளம் கண்டதாக டத்தோ ஃபாட்சில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ரந்தாவ் பஞ்சாங்  நீர் சுத்திகரிப்பு ஆலையில் மூன்று டன் அளவில் துர்நாற்றம் எழுந்ததைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

ரவாங், சுங்கை கோங் நீரோட்டத்திற்குப் பிறகு, இந்த துர்நாற்றம் இல்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் கட்டுமான இயந்திரங்கள் பழுதுபார்க்கும் மற்றும் விற்கும் நிறுவனம் ஒன்றினால் இப்பிரச்சனை எழுந்திருக்கலாம் என்றும் நம்பப்படுவதாக  ஃபாட்சில் குறிப்பிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 430-தின் கீழ், விசாரணைக்கு உதவும் வகையில், தடுப்புக் காவலுக்கான உத்தரவைப் பெற வியாழக்கிழமை அவர்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவிருக்கின்றனர்.

சுத்திகரிக்கப்படாத நீர் தூய்மைக்கேட்டு பிரச்சனையைத் தொடர்ந்து, நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையும் செயல் முடக்கம் கண்டன.

இதனால், கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலலாங்காட் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

 - பெர்னாமா