பொது

பி.கே.பி.பி-யை சாதகமாக்கிக் கொண்டு விலைவாசியை உயர்த்தாதீர்

21/10/2020 09:13 PM

கோத்தா டாமன்சாரா, 21 அக்டோபர் (பெர்னாமா) --நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் இவ்வேளையில், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கி இன்று வரையில் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு  57 வழக்குப் பதிவுகளை உட்படுத்திய 117,880 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

இத்தகைய வழக்குகள் பயனீட்டாளர்  பாதுகாப்புச் சட்டம் 1999, வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961, விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 மற்றும்  கூடுதல் எடையுள்ள சட்டம் 1972 ஆகியவற்றின் கீழ்  பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவ்வமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டம் முழுவதும் குற்றஞ்சாட்டப்பட்ட வணிகர்களுக்கு 14,880 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

'' இக்கட்டுப்பாட்டு உத்தரவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சில வணிகர்கள், வாடிக்கையாளர்களில் நிலைமையைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த விதிமுறையை மீறியிருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டே பொதுமக்களின் நம்பகத்தன்மைக்காக அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது,'', என்று டத்தோ ரோசோல் குறிப்பிட்டார். 

இன்று புதன்கிழமை கோத்தா டாமன்சாராவிலுள்ள என்.எஸ்.கே விற்பனை மையத்திற்கு வருகை புரிந்து விலைவாசிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

- பெர்னாமா