பொது

தடுப்பூசி திட்டம்: முன்னிலைப் பணியாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறும்

20/04/2021 04:15 PM

புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாத எஞ்சிய முன்னிலைப் பணியாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் அது நிறைவு செய்யப்படும்.

முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 95 விழுக்காட்டினர் அதனை நிறைவு செய்திருப்பதாக கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருக்கின்றார்.

முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 571,000 முன்னிலைப் பணியாளர்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சிலர் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கான தங்களின் முறைக்காகக் காத்திருப்பதாகவும் கைரி தெரிவித்தார்.

அனைத்து முன்னிலைப் பணியாளர்களும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டு, இம்மாத இறுதிக்குள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தை நிறைவு செய்வர் என்று தமது தரப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று தொடங்கப்பட்டிருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்திற்கு, கல்வி அமைச்சின் பொது மற்றும் தனியார் கல்வித் துறைகளில் உள்ள ஆசிரியர்களின் பட்டியலுக்காக கொவிட்-19 தடுப்பூசி விநியோகிப்பு உத்தரவாத சிறப்புச் செயற்குழுவான ஜே.கே.ஜே.ஏ.வி இன்னும் காத்திருப்பதாக கைரி கூறினார்.

பொது, தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை எண் அடங்கிய பெயர் பட்டியலைத் தாம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா