பொது

கொவிட்-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மண்டலங்களில் பள்ளிகளை மூடுவீர்

21/04/2021 01:06 PM

கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மண்டலங்களில் உள்ள பள்ளிகளை அரசாங்கம் உடனடியாக மூட வேண்டும் என்று மலேசிய தேசிய ஆசிரியர் சேவை சம்மேளனம் என்.யூ.டி.பி (NUTP) பரிந்துரைத்திருக்கிறது.

பள்ளிகள் மூடப்படுவதால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்றாலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்திருக்கிறார்.

''பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட இதரப் பணியாளர்கள் நோய்த் தொற்று அபாயத்திற்கு ஆளாகி இருக்கையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் பயனில்லை. இறுதியில் பள்ளிகளும் கொவிட்-19 நோயைப் பரப்பும் மையமாக அமைகின்றன,'' என்றார் அவர்.

இதைத் தவிர்த்து, பச்சை மண்டலங்களில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம்போல நடைபெறுவதை உறுதிசெய்யப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அமினுடின் அவாங் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மூடப்படும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதற்கான மின்னியல் உபகரணங்களையும் இணைய வசதியையும் கொண்டிருப்பதைப் பெற்றோர் உறுதி செய்து பள்ளி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 திரள் காரணமாக நேற்று திங்கட்கிழமை சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

-- பெர்னாமா