உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

20/04/2021 06:47 PM

லண்டன், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- கொவிட்19 நோய் பன்மடங்கு அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கான பயணத்தை பிரிட்டன் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட புதிய ரக கொவிட் நச்சுயுறி பிரிட்டனில் கண்டறியப்பட்டிருப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக் தெரிவித்திருக்கிறார்.

தென் கொரியா

புகுஷிமாவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கதிரியக்கக் கழிவுநீரைக் கடலில் கலப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் ஜப்பானின் முடிவை கண்டித்து, 30 க்கும் மேற்பட்ட தென் கொரிய கல்லூரி மாணவர்கள் மொட்டை அடித்தனர்.

தென் கொரியாவில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த கண்டன ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கதிரியக்கக் கழிவுநீரைக் கடலில் கலப்பதாக ஜப்பான் அறிவித்ததை தொடர்ந்து, தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கியூபா

கியூபா நாட்டில் ஃபிடல் கஸ்ட்ரோ மற்றும் ராவுல் கேஸ்ட்ரோ சகோதர்களின் ஆட்சிக்காலம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

அந்நாட்டின் அதிபர் மைக்கேல் டயஸ் கேனல் என்பவர் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆறு தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

செவ்வாய்க் கோள்

INGENUITY எனும் டிரோன் ரக சிறிய ஹெலிகாப்டர் ஒன்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முயற்சியால் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகப் பறந்துள்ளது.

வேற்றொரு கிரகத்தில் இயக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் இது என்று NASA தெரிவித்திருக்கிறது.

சுமார் 1.8 கிலோகிராம் எடையுள்ள அந்த ஹெலிகாப்டர், ஏறத்தாழ 3 மீட்டர் உயரத்திற்குப் பறந்தது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு PERSEVERANCE எனும் தானியங்கி உந்து வாகனத்தை நாசா அனுப்பியது.

அந்த வாகனத்தின் உதவியால் இந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா