சிறப்புச் செய்தி

பொதுமக்களிடையே கொவிட்-19 நோய்க்கான ஐந்து நிலைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் - டாக்டர் திலகம்

29/07/2021 08:19 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே, கொவிட்-19 நோயின் தாக்கம் அமைகிறது. தற்போதைய நிலையில், பலருக்கு கொவிட் நோய்த்தொற்று குறித்து எந்த அறிகுறிகளும் தெரிவதே இல்லை.

எனவே, கொவிட்-19 நோய்க்கான ஐந்து நிலைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்கிறார், கெடா, சுங்கை பெட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனை மருத்துவர், டாக்டர் திலகம் சுப்பையா.

நாட்டில் கொவிட்19 நோய் பரவ தொடங்கிய போது, அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன.

ஆனால், தற்போது உருவாகி வரும் புதிய உருமாறிய கொவிட்-19 தொற்றுகள் காரணமாக அப்பெருந்தொற்றை அடையாளம் காணும் அறிகுறிகளும் மாறுப்பட்டிருப்பதோடு, அதன் பாதிப்புகளும் கடுமையாக இருக்கின்றன.

அவற்றில் முதல் மற்றும் இரண்டாம் நிலைச் சேர்ந்த கொவிட்19 நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாமலும் அல்லது குறைவான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக டாக்டர் திலகம் சுப்பையா விளக்கினார்.

''முதலாம் நிலை நோயாளிகளுக்கு எவ்வாறான அறிகுறிகளும் இருக்காது. ஆனால், கொவிட்-19 நோய் பரிசோதனையில் அவர்களுக்கு அந்நோய் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை நோயளிகளுக்கு சில அறிகுறிகளுடன் இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்,'' என்று அவர் கூறினார்.

அதோடு, மூன்றாவது நிலையைச் சேர்ந்த கொவிட்-19 நோயாளிகள் மிதமான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

''இவர்களுக்கு காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகிய அறிகுறிகள் இருக்கும். அதோடு, நிமோனியா மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்,'' என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நான்காவது நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆபத்தான பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர் திலகம் தெளிவுப்படுத்தினார்.

''இந்த நிலை நோயளிகளுக்கு நிமோனியா மற்றும் மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனை ஏற்படுவதோடு, சுவாச உதவி கருவி தேவைப்படும். இவர்களின் உடலில் பிராணவாயு அளவு 94 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்,'' என்று அவர் கூறினார்.

இறுதியாக, ஐந்தாவது நிலையைச் சேர்ந்த நோயாளிகள், கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, கவலைக்கிடமான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றனர்.

நாட்டில், பதிவாகும் தினசரி கொவிட்-19 சம்பவங்களில், ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பவங்கள் முதல் மற்றும் இரண்டாம் நிலையை உட்படுத்தியதாகும்.

எனவே, பொதுமக்கள் தடுப்பூசிகளைச் செலுத்தி கொண்டும், சுயக் கட்டுப்பாட்டைப் பின்பற்றியும், உயிர்க் கொல்லியாக உருமாறிய கொவிட்-19 தாக்கத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர் திலகம் மீண்டும் நினைவுறுத்தினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]