சிறப்புச் செய்தி

நன்றியின் பலனாக இந்தோனேசிய அதிபரிடமிருந்து கிடைத்த 10 மயில்கள்; பராமரித்து வரும் பரந்தாமன்

31/07/2021 07:52 PM

பிறை, 30 ஜூலை (பெர்னாமா) -- 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி உலகின் பல பகுதிகளைப் புரட்டிப்போட்டது, சுனாமி ஆழிப் பேரலை.

ரிக்டர் அளவை கருவியில் 9.3-ஆக பதிவான நிலநடுக்கத்தினால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக, இந்தோனேசியா, ஆச்சேயில் இந்த இயற்கை சீற்றத்தால் பலியோனோரின் எண்ணிக்கை இலட்சத்தைக் கடந்த வேளையில் இதில் சிக்கி மாண்டவர்களின் சடலங்களை மீட்பதில் அந்நாடு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியது.

அச்சூழலில், சடலங்களை மீட்டெடுப்பதில் தன்னார்வ முறையில் ஈடுபட்டு அதன் மீட்புக் குழுவிற்கு பக்கபலமாக இருந்த மலேசியாவை சேர்ந்த பரந்தாமன் தட்சிணாமூர்த்திக்கு நன்றி செலுத்தும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தோனேசியா முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயூனோ 10 மயில்களை வழங்கியிருந்தார்.

பினாங்கு, பிறையைச் சேர்ந்த பரந்தாமன் கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2012-ஆம் ஆண்டு வரை கலிமந்தானில் செம்பனை தொழிற்துறை நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இக்கட்டான சூழ்நிலையின்போது உதவி புரிந்தற்கு நன்றி கூறும்விதமாக வழங்கப்பட்ட  அந்த 10 மயில்களும் தற்போது இனவிருத்தியடைந்து ஐந்து மடங்காக அதிகரித்திருப்பதாகவும், அவை, பிறை, தாமான் கின்சாரில் உள்ள காலி இடத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பரந்தாமன் தெரிவித்தார்.

''அந்த சமயத்தில் இந்தோனேசிய அதிபராக இருந்த சுசிலோ பம்பாங் யுதோயூனோ என்னிடம் உதவிக் கேட்டிருந்தார். தமக்கு கீழ் உள்ள ஊழியர்களுடன் உதவியுடன் சடலங்களை மீட்டெடுக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்,'' என்றார் தட்சிணாமூர்த்தி. 

இயற்கையிலே மயில்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் பரந்தாமன். 

மயில்கள் வளர்ப்பதில் கொண்ட ஆர்வம், அப்பறவைகள் மீதான அலாதி அன்பினால்  தற்போது பல நாடுகளைச் சேர்ந்த 200 மயில்களையும் தாம் மட்டுமே பராமரித்து வருவதாக  பரந்தாமன் பெருமையுடம் கூறினார்.

இந்நிலையில், மயில்களைப் பராமரிப்பதில் பல பயிற்சிகளை வழங்கி வந்த பரந்தாமன் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை தமது வளர்ப்பில் உள்ள மயில்களுக்கான செலவுகளைப் பார்த்து வந்தார்.

ஆனால், தற்போது கொவிட்டால் பல துறைகள் முடங்கிக் கிடக்கும் நிலையில் பரந்தாமனுக்கும் இதே சூழல் ஏற்பட்டுள்ளது.

தமது வீட்டிற்கு அருகிலுள்ள திறந்த வெளியில் மயில்களுக்கென கூண்டு அமைத்து தாமரை குளம் ஒன்றை நிறுவி, அதனை ஒரு சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என்ற தமது கனவை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவேற்றக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

''நான் இதற்கு முன்னர் செய்த வேலை மற்றும் தொழிலில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்து வைத்திருந்தேன். ஆக, என்னுடைய சொந்த பணத்தில்தான் நான் இந்த மயில்களைப் பராமரித்து வருகிறேன். அதே நேரத்தில், இந்த திட்டம் கூடியவிரைவில் நினைவாக்கப்படும். எனக்கு மக்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.    

அதுமட்டுமின்றி, பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவுள்ள இவரின் இந்த பூங்காவிற்குச் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதையும் பரந்தாமன் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]