பொது

பாலியல் தொந்தரவு; கே. ரவிச்சந்திரன் மறுத்து விசாரணை கோரினார்

30/07/2021 08:54 PM

ஈப்போ, 30 ஜூலை (பெர்னாமா) -- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 வயது பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காகப் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர் இன்று பேராக், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

நீதிபதி, என். பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 53 வயதான கே. ரவிச்சந்திரன் மறுத்து விசாரணை கோரியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி மதியம் ஒரு மணியில் இருந்து 1.25 மணிக்குள், பள்ளியில் இருந்து அச்சிறுமியை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும்போது அச்செயலைப் புரிந்ததாக ரவிச்சந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் 2017-ஆம் ஆண்டு சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம், செக்‌ஷன் 14 உட்பிரிவு a-வின் அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அதோடு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 295 உட்பிரிவு 1A-வின் கீழ், ஒரு ஆண்டிற்கும் குறையாத மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாத காலகட்டம் வரையில் அவர் போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும்.

நான்கு ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் ரவிச்சந்திரன் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா