உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 31/07/21

31/07/2021 08:03 PM

கராச்சி, 31 ஜூலை (பெர்னாமா) -- டெல்டா  உருமாறிய தொற்றுகளைத் தொடர்புப்படுத்தி அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்களின் எதிரொலியால், பாகிஸ்தான் கராச்சியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த பொது முடக்கம் ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும். பள்ளிகள், மற்றும் அலுவலகங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஜப்பான்

2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் தோக்கியோவை சுற்றியுள்ள மேலும் மூன்று பகுதிகளில் அவசரக்கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்களைக் குறைக்க, இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடெ சுகா தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஒரே நாளில் மட்டும், தோக்கியோவில் 3300 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நேபாளம்

நேபாளத்தில் தற்போது கொவிட்-19 தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் காத்மாண்டுவில், நீண்ட வரிசையில் நின்று, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் முனைவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

இருப்பினும், தடுப்பூசி செலுத்துவதில், முன்னிலை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியா

இந்தியா, இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால், குறைந்தது எழுவர் பலியாகியிருக்கின்றனர்.

மேலும் மூவர் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், இந்தியாவில் இதுவரை 160 பேர் பலியாகியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா

அடுத்த 12 மாதங்களில், ஊட்டச்சத்து குறைபாட்டால், எத்தியோப்பியா, திக்ரேவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று யுனிசெஃப் (UNICEF) தெரிவித்திருக்கிறது.

இரண்டு கர்ப்பிணி மற்றும் தாய் பாலூட்டும் பெண்களில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கூறுகிறது.

இப்பிரச்சனையைக் கையாள மிகப் பெரிய உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)