பொது

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் 'WALK IN' முறையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நடவடிக்கை

31/07/2021 08:11 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா)  -- கிள்ளான் பள்ளதாக்கில், ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி 'WALK IN' முறையில் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நடவடிக்கை அமல்படுத்தப்படும்.

இருப்பினும், தொடக்க கட்டமாக ஆகஸ்ட் இரண்டாம் தேதி, ஒன்றுக்கும் மேற்பட்ட
நோய்க் கண்ட 40 வயதிற்கு மேற்பட்ட நடுத்தர வயதினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு பின்னர், 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'walk in' முறையில் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் கைரி ஜமாலுடின் கூறியிருக்கிறார்.

இன்று சனிக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான் தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு மலேசியாவிற்கான சீனத் தூதர் ஓயாங் யூஜிங்குடன் வருகை அளித்த பின்னர், கைரி அவ்வாறு குறிப்பிட்டார்.

கிள்ளான் பள்ளதாக்கில், 'WALK IN' முறையை அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களும் ஏற்றுக் கொள்ளாது என்றும் அதன் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நான்கு லட்சத்திற்கும் அதிகமான அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை நன்கொடையாக பெறுவதற்கான தேதியை தீர்மானிக்க விஸ்மா புத்ரா, பிரிட்டன் தூதரகத்துடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

ஜூலை 5-ஆம் தேதி ஃபைசர்-பியோன்டெக் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன் நான்காவது நாடாக திகழ்கிறது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)