அரசியல்

14-வது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதல் கூட்டம் நாளை தொடக்கம்

12/09/2021 04:38 PM

புத்ராஜெயா, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமைத்துவத்தின் கீழ் முதல் முறையாக 14-வது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதல் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது.

அக்கூட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா தொடக்கி வைப்பார்.

நாடாளுமன்றத்தின் 62-வது நிறைவு நாள் கொண்டாட்டத்திற்குப் பின்னர் நடைபெறும் இக்கூட்டத்தில் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்பது உட்பட மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் உதவித் திட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும்.

இத்தவணைக்கான மக்களவைக் கூட்டம் நாளைத் தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும்.

இதில் மக்களவைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் பதிலாக புதிதாக ஒருவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதுவரை அப்பதவிக்கு பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லானும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவ்விருவரின் பெயர்களும் முன்மொழியப்பட்டால், செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் 220 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மக்களவைத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நடைபெறும்.

மக்களவைத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை கூட்ட நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளதை மக்களவைத் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னுன் உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]