அரசியல்

கூச்சலும் கோஷமும் இல்லாமல் மக்களவை கூட்டத்தொடர் அமைய வேண்டும்

12/09/2021 08:14 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- 14-வது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

வெறும் கூச்சலும் கோஷமும் இல்லாமல் மக்களின் எதிர்ப்பார்ப்புளுக்கு ஏற்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் களமாக இக்கூட்டத்தொடர் அமைய வேண்டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் டத்தோ அன்புமணி பாலன்.

14-வது பொதுத்தேர்தலுக்குப் பின்னர், நாட்டின் நிலையற்ற அரசியல் தன்மையால்  இருமுறை ஆட்சி களைப்பு ஏற்பட்டு தற்போது புதிய அரசாங்கத்தின் வழி நாடு பயணிக்கிறது.

மீண்டும் இப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது என்று கூறிய டத்தோ அன்புமணி பாலன் அரசியல் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய அரசியல் சிந்தனைகள் என்ற ரீதியில் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை தொடர வாய்ப்புள்ளதாக கூறுகின்றார்

''குறிப்பாக அரசியல் மறுசீரமைப்புத் திட்டங்களை பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இது நல்லதொரு தொடக்கம். அரசியல் மறுமலர்ச்சி திட்டங்களையும் அவர் கொண்டுவர வேண்டும்,'' என்றார் அவர். 

மாட்சிமை தங்கிய மாமன்னரின் நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே பிரதமர் நியமனம் அமைந்து இஸ்மாயில் சப்ரி தலைமைத்துவ பொறுப்பை வகிக்கின்றார்.

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னெடுப்பதற்குப் பதில் அவருக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படலாம் என்பதும் அன்புமணியின் கருத்தாகும். 

இதனிடையே, செப்டம்பர் 27-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நாட்டின் 12-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாய தேவைகளும் பூர்த்திசெய்யபட வேண்டிய எதிர்பார்ப்பு குறித்தும் அன்புமணி விவரிக்கின்றார்.  

''தேசிய முன்னேற்றத்தில் இந்தியர்களை இணைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பொருளாதாரத் துறையில் இந்தியர்களின் பங்கு இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, கல்வி, சமூகம் போன்ற மற்ற விஷயங்களிலும் இந்தியர்களின் பங்கிருப்பதை உறுதி செய்யும் ஒரு திட்டமாக அமைய வேண்டும்,'' என்று அன்புமணி மேலும் விளக்கமளித்தார். 

அதேவேளையில், துணை சபாநாயகரின் நியமனமும் இம்முறை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தின் கவனத்தைப் பெற்றிருப்பதாக அன்புமணி கூறுகின்றார். 

எனவே, மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமெனில் மக்களவை உறுப்பினர்கள் அந்த பொறுப்புக்கு சரியான ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அதோடு, வரும் அக்டோபர் 29-ஆம் தேதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், அரசியல் ரீதியாக தேவையற்ற புதிய குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அன்புமணி கூரினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]