பொது

181 எஸ்.ஓ.பி.கள் பத்தாக குறைக்கப்படும்

14/09/2021 05:58 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா)-- தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் முழுவதும் பயன்படுத்தப்படும் 181 செயல்பாட்டு தர விதிமுறைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பத்தாகக் குறைக்கப்படவிருக்கின்றன.

பொதுமக்கள், தொழிற்துறையினர் மற்றும் அமலாக்கத்தரப்பினர் ஆகிய அனைவரும் இந்த எஸ்.ஓ.பி குறித்து  நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திலாயே இவை குறைக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

''181 எஸ்.ஓ.பி-களை மலேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியோடு அமைச்சு மிகக் கணிசமாக அதாவது 10 எஸ்.ஓ.பி-களாக குறைக்கவிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு சற்று கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு இலகுவாக இருக்கும். மேலும், வழங்கப்படும் தளர்வுகள் குறித்து இன்று கலந்தாலோசிக்கப்பட்டது. அது குறித்து பிரதமர் விரைவில் அறிவிப்பார்,'' என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சபஃருல் தெங்கு அப்துல் அஸிஸ், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசா  ஆகியோருடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர்டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, நடைமுறைப்படுத்தப்படும்  செயல்பாட்டு தர விதிமுறைகள் மக்களுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தற்போதுள்ள தளத்தின் மூலமாக அதை ஒருங்கிணைக்கவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)