சிறப்புச் செய்தி

பதின்ம வயதினருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்

19/09/2021 08:07 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- பி.பி.என் எனப்படும் தேசிய மீட்புத் திட்டத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கட்டங்களில் உள்ள மாநிலங்களில், வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதைத் தொடர்ந்து, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன.

எனவே, இது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அவசியம் என்கிறார் பொது சுகாதார மருத்துவ நிபுணர், டாக்டர் கெளசல்யா ஜுவெல்.

இந்த தடுப்பூசி திட்டத்தில் தனியார் கல்வி துறை மாணவர்கள், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சமூகத்தில் உள்ள அகதிகள் மற்றும் குடியுரிமை இல்லாத இளைஞர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இத்திட்டத்தில் தேர்வு வகுப்பு மற்றும் உடலில் பிற உபாதைகள் கண்டிருக்கும் 16 மற்றும் 17 வயதான மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

எனவே, இத்திட்டத்திற்கான செயல்முறையை எளிமையாக்க மலேசிய சுகாதார அமைச்சு சில வழிகளைக் கண்டறிந்துள்ளதாக டாக்டர் கெளசல்யா கூறினார். 

''மலேசிய சுகாதார அமைச்சு VAKSIN-ANAK-KU எனும் அகப்பக்கத்தை தொடங்கி இருக்கிறது. அதில், அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகள் கொவிட்-19 நோய் தடுப்பூசிக்காக பதிந்து கொள்ளலாம். அதோடு, பெற்றோர்கள் மைசெஜாதரா செயலியில் தங்கள் பிள்ளைகள் தடுப்பூசி பெறுவதற்கு பதிந்து கொள்ளலாம்,'' என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தில், பதின்ம வயதினருக்கு, பைசர், பியோன்டெக் வகை கொவிட்-19 தடுப்பூசி இரண்டு தடவை செலுத்தப்படவிருக்கின்றன.

எனவே, செலுத்தப்படும் தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்கும் வேளையில். அது பயனுள்ள மற்றும் தரமாக இருப்பதையும் சுகாதார அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், பதின்ம வயதினருக்கு மூன்று நடைமுறையில் தடுப்பூசி செலுத்தப்படவிருப்பதாக கூறிய டாக்டர் கௌசல்யா, முதல் நடைமுறை குறித்து இவ்வாறு விளக்குகிறார்.

''இந்த நடைமுறையில் பள்ளிகளிலே தடுப்பூசி செலுத்தப்படும். அரசாங்க, தனியார் அல்லது அரசு சார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு உதவி செய்வார்கள். பள்ளிகளிலே தங்கி பயிலும் மாணவர்களுக்கு, அப்பள்ளிகளில் அல்லது அருகில் உள்ள சிகிச்சையகங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். பள்ளிகள் திறக்கப்ட்டாத பட்சத்தில் முதல் தடுப்பூசி செலுத்தபட்ட அதே இடத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும்'' என்று அவர் கூறினார்.

இந்நிலையில், மைசெஜாதரா செயலியில் பதிவு செய்வதோடு, பிற உபாதைகளுக்காக சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைகளிலே கொவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

''இரண்டாவதாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல இயலாத பட்சத்தில், மைசெஜாதரா செயலி மூலம் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்வதால், அருகிலுள்ள சிகிச்சையகங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி வழங்கப்படும். மூன்றாவதாக,  பிற உபாதைகள் கண்டிருக்கும் பிள்ளைகள் தங்கள்  சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைகளிலே கொவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் '' என்று அவர் குறிப்பிட்டார்

இதனிடையே, இந்தக் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட அனைவரது பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால், உயிர் காக்கும் கொவிட்-19 தடுப்பூசிகளை கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று டாக்டர் கெளசல்யா கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]