சிறப்புச் செய்தி

ஜவுளிக்கடைகளில் வேலையாட்கள் பற்றாக்குறை ; வியாபாரத்தில் நெருக்கடி - டத்தின் மகேஸ்வரி

21/09/2021 08:22 PM

கோலாலம்பூர், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் சில வர்ததகத் துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக செயல்பாட தொடங்கி இருந்தாலும், பல மாதங்களாக முடங்கி கிடந்ததால், அவற்றை மீண்டும் மீட்சிப் பெறச் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், பெரும்பாலான அந்நியத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் சென்று விட்டதால், தற்போது வேலையாட்கள் பற்றாக்குறைப் பிரச்சனை நிலவுகிறது.

இதனால், ஜவுளி கடை உரிமையாளர்களும் தங்களின் வியாபாரத்தை நடத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக, மலேசிய இந்திய ஜவுளி சங்கப் பொதுச் செயலாளார் டத்தின் மகேஸ்வரி ராமசாமி தெரிவித்திருக்கின்றார்.

இந்த ஜவுளித்துறை அந்நிய தொழிலாளர்களைக் மட்டும் நம்பி வியாபாரம் நடத்தி வந்த சூழ்நிலையில் பணியாளர் பற்றாக்குறையினால் அதன் உரிமையாளர்கள் அனைவரும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக டத்தின் மகேஸ்வரி ராமசாமி தெரிவித்தார்.

''இந்தக் கொவிட்-19 பெருந்தொற்றால் தங்களது சொந்த நாட்டிற்குச் சென்ற அந்நிய தொழிலாளர்கள் நம் நாட்டிற்கு திரும்ப இயலவில்லை. வேலைக்கான பெர்மிட் காலவதியாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் எங்களுடைய வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

அதோடு, ஜவுளித்துறைகளில் பணிப்புரிவதற்கு உள்நாட்டினர் தயாராக இல்லாததால் அதன் தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் வருத்தத்துடன் கூறினார்.

இதனிடையே, இந்தத் ஜவுளித்துறை பாரம்பரிய தொழில்துறை என்பதால் பொருட்களை வியாபாரம் செய்யவும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புக் கொள்ளவும் இந்திய தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் மகேஸ்வரி தெளிவுப்படுத்தினார்.

சில துறைகளுக்கு மட்டுமே அந்நிய தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களது துறைக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எங்களது துறைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கினால் வியாபாரத்தைத் தொடர சிறப்பாக இருக்கும், என்றார் அவர்.

ஜவுளித்துறையில் மீண்டும் அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு அதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் செயலவை உறுப்பினருமான மகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், அதற்கு அரசாங்கம் நிர்ணயிக்கும் கடுமையான செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)