உலகம்

உலக நாடுகள் தவறான திசையில் நகர்வதாக ஐ.நா எச்சரிக்கை

22/09/2021 05:03 PM

நியூயார்க், 22 செப்டம்பர் (பெர்னாமா)-- உலக நாடுகள் பள்ளத்தின் விளிம்பில் உள்ளதாகவும் தவறான திசையில் நகர்வதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்திருக்கிறார்.

இதுவரை இல்லாத அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டு வருவதால் அனைத்துலக சமூகம் வேறுபாடுகளை களைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

''ஒருபுறம், கொவிட்-19 தடுப்பூசிகளை குறுகிய நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்தோம். அறிவியல் மற்றும் மனித புத்தி கூர்மையின் வெற்றி இது. மறுபுறம், அரசியல் விருப்பமின்மை, சுயநலம் மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றால் அந்த வெற்றி தோல்வியடைவதை நாம் பார்த்தோம். பெரும்பாலான பணக்கார நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டன. ஆனால் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் இன்னும் முதல் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்,'' என்று அவர் கூறினார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தில் வழங்கிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

உலகளாவிய அமைதி, காலநிலை மாற்றம், செல்வ இடைவெளி, பாலின வேறுபாடு மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி ஆகிய முக்கிய கூறுகளுக்கு உலக நாடுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)