பொது

கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்; அதிகரித்து வரும் விவாகரத்து சம்பவங்கள்

22/09/2021 07:58 PM

கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையன்று; புரிந்து கொண்டு வாழ்வதே வாழ்க்கையாகும். அனைத்து உறவுகளுக்கும் இக்கூற்று பொருந்தும் என்றாலும் கணவன் மனைவி தம்பதியருக்கே அது மிக ஏற்புடையதாக விளங்குகிறது. 

அதிலும் சுகாதாரம், பொருளாதாரம், உயிரிழப்பு என்று கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் நீண்டு கொண்டே செல்கின்ற இக்காலகட்டத்தில் குடும்ப உறவுகள் குறிப்பாக கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் மணமுறிவின் அதிகரிப்பும் மறுப்பதற்கில்லை.  

திருமணம் என்பது சமூகம், சட்டம் மற்றும் உறவுமுறை சார்ந்த சமயப்பற்றான வாழ்நாள் ஒப்பந்தமாகும். இந்து கலாச்சாரத்தின்படி இரு மனங்கள் சங்கமித்து ஒரு மனதாக இணைந்து அறுவடை செய்யவேண்டிய ஆயிரங் காலத்துப் பயிராகவும் திருமணம் வர்ணிக்கப்படுகிறது.

ஆனால், தற்போதைய காலச் சூழலைக் காரணம் காட்டி, மன வலிமை இழந்து, தாங்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு, மணமுறிவு அல்லது விவாகரத்தையே பல தம்பதியர் தீர்வாக மேற்கொள்வது வருத்தத்திற்குரியது என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை கூறியிருக்கிறார். 

சமய வழியில் கற்றுத் தரப்படும் நெறிமுறைகள் பலருக்கு வாழ்க்கை பாடத்தைப் போதிப்பதால், மணமுறிவைக் காட்டிலும் அந்நெறிமுறைகளே அறிந்து பின்பற்றுவது இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் சாத்தியத்தையும் அவர் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

''மனவலிமையற்று, சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், அவர்களின் நிலை கோபமாக உருவெடுத்து இருவரிடத்திலும் மனமுறிவை உண்டாக்கிவிடுகிறது. மனவலிமையை அதிகரிக்க இந்து சமயத்தில் பல நெறிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன,'' என்றார் அவர்.

எனினும், கால சக்கரத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை முறையும் மாறி வரும் நிலையில், வளர்ந்த பின் சமயக் கல்வியில் ஈடுபட்டு நெறிகளைக் கற்பதும் சற்று அசாத்தியமான ஒன்று என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நம் நாட்டில் உள்ள பிற மத கலாச்சாரங்களில், திருமண வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்னர், அவர்கள் முன்னெடுக்கும் சில நடைமுறைகள் சிறந்ததொரு முன்னுதாரணமாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

''மற்ற இன மக்களின் வாழ்க்கை நடைமுறையில் திருமணத்திற்கு முன்னதாக பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்ற கூற்றையும் ராதாகிருஷ்ணன் முன்வைத்தார். 

எனவே, தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், பெற்றோர்கள் சமயம் சார்ந்த போதனைகளை அவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.    

''ஒரு குழந்தை கருவுற்ற நாள் முதலே சமய நெறிகளையும் வாழ்க்கை பாடத்தையும் அவர்களுக்குப் புகட்ட வேண்டும். இதன்வழி, வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்களைக் களைய அவர்கள் சிந்தித்து விவேகத்துடன் செயல்படும் சாத்தியம் அதிகம் உள்ளது,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்வழி, பாரம்பரியம் காக்கப்படுவதோடு, விட்டுக் கொடுத்தும் புரிந்து கொண்டு வாழும் நடைமுறையும், அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையில் நிலைநிறுத்தப்பட்டு நீடித்திருக்கும் என்று ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)