சிறப்புச் செய்தி

இடியாப்பத்தில் தேசியக் கொடி; இளைஞர் நவீன்குமார் சாதனை

22/09/2021 08:01 PM

கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- சிக்கல் என்ற வார்த்தைக்கு, இடியாப்பத்தைத் தான், உதாரணம் காட்டுவார்கள். ஆனால், சாதனைப் படைப்பதற்கும், இடியாப்பத்தைக் கருவியாக பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார், பேராக், ஈப்போவைச் சேர்ந்த 25 வயதுடைய நவீன் குமார் ரவி.

பேராக், ஈப்போவில் பிறந்து வளர்ந்த நவீன் குமார், கடந்த ஐந்து ஆண்டுகளாக இடியாப்பம் வியாபாரத்தில் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறார். 'RAVI PUTHUMAYAM'-த்தின் தோற்றுநருமான நவீன் குமார், செமோர் வட்டாரத்தில் இடியாப்பம் வியாபாரம் மூலம் பிரபலமானவர்.

ஓய்வு பெற்ற தமது தந்தை ரவியுடன் இடியாப்பம் வியாபாரம் செய்து வரும் இவர், நாள் ஒன்றுக்கு 250 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டி வருகின்றார்.

இடியாப்பம் தயாரிக்கும் நுணுக்கங்களை மற்றொருவரிடம் கற்று கொண்ட இவர், தற்போது பல்வேறு சுவைகளிலும் வண்ணங்களிலும் விதவிதமாய் இடியாப்பம் செய்து வருகின்றார்.

''இந்த இடியாப்பம் செய்வது எப்பது என்று கற்று கொண்டு பின்னர் ஐந்து ஆண்டுகளாக இந்த வியாபரத்தைச் செய்து வருகின்றேன். இதுவரை 14 முதல் 15 சுவைகளில் இடியாப்பம் செய்வேன்,'' என்று அவர் கூறினார்.

இந்நிலையில், அண்மையில் கொண்டாடப்பட்ட 64-ஆவது மலேசியா சுதந்திர தினத்தை முன்னிட்டு, இடியாப்பம் மற்றும் கொழுக்கட்டைகளைக் கொண்டு 45 நிமிடங்களில் நாட்டின் தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்யை நவீன் குமார் உருவாக்கியுள்ளார்.

இதற்காக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஜேக்ஜி உலக சாதனைப் புத்தகம் தமக்கு அங்கீகாரம் வழங்கியதாக அவர் கூறினார். 

''64-ஆவது மலேசியா சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த முயற்சியை மேற்கொண்டேன். அது குறித்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றினேன். அதற்காக  ஜேக்ஜி உலக சாதனைப் புத்தகம் எனக்கு அங்கீகாரம் வழங்கியது,'' என்று அவர் கூறினார்.

இந்த சாதனை தமக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாகவும், இந்த இடியாப்ப வியாபாரத்தை விரிவுப்படுத்த தாம் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கேற்ப, தமது தொழிலை பெருமைமிகு அடையாளமாக மாற்றிக் கொண்ட நவீன்குமாருக்கு, பெர்னாமா தமிழ்ச்செய்தியும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]