பொது

ஜி.கே.பி விண்ணப்பத்திற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டவில்லை - சஃப்ருல்

23/09/2021 04:19 PM

கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட PKS MIKRO எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு முதவும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட  GKP (ஜி.கே.பி) எனப்படும் பரிவுமிக்க சிறப்பு நிதிக்கான விண்ணப்பத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் கடுமையானது அல்ல.

இதில் எந்தவொரு தரப்பினரும் விடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கின்றார்.

''மிகவும் குறைந்தபட்ச நிபந்தனைகளே விதிக்கப்பட்டிருக்கின்றன, கடுமையானது அல்ல. கடந்த ஜூலை மாதத்தில் ஜி.கே.பி. 4.0-த்திற்கு விண்ணப்பம் செய்ய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு முன்னர் விண்ணப்பம் செய்து நிதி கிடைக்காதவர்கள் புதிதாக நான்கு முறை விண்ணப்பம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஜி.கே.பி 1.0-க்கும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜி.கே.பி 2.0-க்கும், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஜி.கே.பி 3.0-க்கும், ஜூன் 30ஆம் தேதி ஜி.கே.பி 4.0-க்கும் விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது,'' என்றார் அவர்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் சபாக் பெர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹ்மட் ஃபாசியா முஹ்மட் ஃபாகே ஜி.கே.பி விதிமுறைகள் குறித்து கூடுதல் கேள்வி எழுப்பிய போது தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் இவ்வாறு பதிலளித்தார்.

120 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் சிலாங்கூரிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் உட்பட இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான MIKRO தொழில்முனைவர்கள் ஜி.கே.பி 4.0 சிறப்பு நிதியைப் பெறத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

மலேசிய நிறுவனங்களின் ஆணையம், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவற்றில் பதிவு செய்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டிருப்பதாக சப்ரூல் தெரிவித்தார்.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)