பொது

பேங்க் நெகாரா நிதியின் கீழ் அதிகமான நிதி திட்டங்கள் - சஃப்ருல்

23/09/2021 04:35 PM

கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- பேங்க் நெகாரா நிதியின் கீழ், நிதி மேம்பாட்டு கழகங்கள், IKP (ஐ.கே.பி)  810 கோடி ரிங்கிட்டை உட்படுத்தி சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கியிருப்பது உட்பட அதிகமான நிதி திட்டங்களை
மேற்கொண்டிருப்பதாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

BANK SIMPANAN NASIONAL, BANK RAKYAT, AGRO BANK, SME BANK ஆகிய நிதி கழகங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், எளிமையான கடனுதவி திட்டத்தின்கீழ் நிதியுதவிகளை வழங்கி வருவதாக தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் குறிப்பிட்டார்.

''முன்னோக்கிச் செல்லும் பாதையில், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கான கடனுதவியை எளிமையாக்குவதைத் தவிர்த்து, முதலீடுகளுக்கு முக்கியத்துவம், தொடக்கக் கட்ட புத்தாக்கத்தில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும் இலக்கவியல் நோக்கிச் செல்பவர்களுக்கும் ஆதரவளிக்கும் கடனுதவி ஆகியவற்றுக்கான வியூகத்தை ஐ.கே.பி. வலியுறுத்த வேண்டும். கூடுதலாக, நிலைப்பாட்டை வலியுறுத்தும் துறையில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகளையும் ஐ.கே.பி. ஆதரவளிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

அதிகமான பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் திறக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வர்த்தகங்கள் விரைவில் செயல்படுவதற்கு ஏதுவாக எளிமையான தீர்வை ஐ.கே.பி. வகுக்க வேண்டும் என்று நிதி அமைச்சு வலியுறுத்துவதாக சஃப்ருல் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில், பரிவுமிக்க சிறப்பு நிதி, ஜி.கே.பி அமலாக்கம் குறித்து சபாக் பெர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹ்மட் ஃபாசியா முஹ்மட் ஃபாகே  எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)