பொது

உயர்கல்வி மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்க மனநல நிபுணர்கள்

23/09/2021 05:01 PM

கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா)-- கொவிட்-19 காலகட்டத்தில் கற்றல் செயல்முறையில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்க நாட்டிலுள்ள அனைத்து பொது பல்கலைக்கழகங்களிலும் 150 ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மன அழுத்தப் பிரச்னையைக் கையாள இயங்கலை வாயிலாக ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்களை மாணவர்கள் தொடர்பு கொண்டதாக உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ டாக்டர் அஹ்மட் மஸ்ரிஸால் முகமட் தெரிவித்தார்.

''இந்த விவகாரம் தொடர்பில் இன்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மனநலன் தொடர்பான பிரச்சனை இருந்தால், பல்கலைக்கழக அகப்பக்கத்தில் காணப்படும் எண்ணைத் தொடர்புக் கொள்ளுமாறு ஒவ்வொரு மாணவர், பிள்ளைகள் அல்லது அனைவருக்கும் தெரிவிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

கொவிட்-19 காலகட்டத்தில், கல்வி செயல்முறையில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்க அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பாத்தாங் லுப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மாணவர்களின் மன உளைச்சல், மனக்கவலை, மன சோர்வு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசிய பொது பல்கலைக்கழக ஆலோசனை மற்றும் தொழில் மன்றத்தின் ஒத்துழைப்புடன் உயர்கல்வி அமைச்சு, உயர்கல்விக்கழக மாணவர்களுக்கான மனநல பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை மன உளைச்சலை கையாளும் 160 திட்டங்களை இயங்கலை வாயிலாக பொது பல்கலைக்கழகம் நடத்தி இருக்கும் நிலையில் இரு திட்டங்கள் கடந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் ஐந்து திட்டங்கள் இவ்வாண்டும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும் டத்தோ டாக்டர் அஹ்மட் மஸ்ரிஸால்  கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)