பொது

மாநிலம் கடக்கும் அனுமதி கொவிட் 19 அதிகரிப்புக்கு வித்திடாது

23/09/2021 05:16 PM

கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா)-- நாட்டில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 90 விழுக்காட்டை அடைந்தால் மாநிலம் கடக்கும் அனுமதியானது கொவிட்-19 சம்பவங்களின் அதிகரிப்புக்கு வித்திடாது.

மாறாக, அப்பெருந்தொற்று மக்களிடையே பரவுவதற்கு ஒன்றுகூடும் நடவடிக்கை அல்லது பேரணிகளே காரணமாகும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

''பெரியவர்களின் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 90 விழுக்காடாக நிர்ணயித்திருந்த போது கோலா சிலாங்கூரில் மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக என்று திருத்தம் செய்திருந்தோம். பின்னர் பதின்ம வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். ஆனால் தற்போது மாநிலம் கடப்பது மட்டும் சம்பவங்களின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்காது. கூட்டம் கூடினால் மட்டுமே நோய் பரவல் அதிகம் பதிவாகுகிறது. ஆகவே நாங்கள் பொது சுகாதார வழிகாட்டியை கருத்தில் கொள்ளுவோம். மாநிலம் கடக்கும் அனுமதி மிகப் பெரிய பிரச்சனைக் கிடையாது,'' என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை, மக்களவையில் சுகாதார அமைச்சுக்கான  மாட்சிமை தங்கிய மாமன்னரின் உரை மீதான விவாதத்தை நிறைவு செய்தபோது கைரி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் 90 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால்,மாநிலம் கடப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று புதன்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்

ஆகவே, நாட்டில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதைத் தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து செயல்பாட்டு தர்விதிமுறை எஸ்.ஓ.பி-யை பின்பற்ற வேண்டும் என்று கைரி ஜமாலுடின் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)