அரசியல்

ம.இ.கா-வின் அனைத்து உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும்

14/10/2021 08:24 PM

கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா) -- ம.இ.கா-வின் அனைத்து உயர்மட்ட பதவிகளுக்கான கட்சித் தேர்தல், இவ்வாண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், நவம்பர் 19 நடைபெறும்.

இந்நிலையில், தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கான வேட்புமனு வரும் சனிக்கிழமை அக்டோபர் 16 தாக்கல் செய்யப்பட்டு, 30-ஆம் தேதி வாக்களிப்பு நடத்தப்படும் என்று ம.இ.கா. பொதுச் செயலாளர் டத்தோ எம். அசோஜன் கூறியிருக்கிறார்.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற ம.இ.கா தலைவர் போட்டியில், டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, நடைபெற்றிருக்க வேண்டிய கட்சியின் அனைத்து உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக, அவர் கூறினார்.

''இந்நிலையில், கட்சித் தேர்தல் மீண்டும் நடைபெறுவதற்கு, இம்மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்ட செயலவை உறுப்பினர் கூட்டம் முடிவுச் செய்திருக்கிறது,'' அவர் குறிப்பிட்டார்.

இம்முறை நடைபெறவிருக்கும் கட்சி தேர்தல் குறிப்பாக, உதவி மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல், கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

''100 வேட்புமனு தாக்கல் இருந்தால் மட்டுமே ஒருவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது, 100 வேட்புமனு தாக்கலில் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழியும் பட்சத்தில், 200 கிளைத் தலைவர்களின் ஆதரவு சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேவைப்படுகிறது. அந்த ஆதரவு கொண்டிருக்கும் ஒருவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தகுதிப் பெற்றவர். தேசிய உதவித் தலைவர் போட்டியிடுபவர்களுக்கு 50 வேட்புமனு இருப்பதால் மட்டுமே அவர் போட்டியிடுவதற்கு தகுதி பெறுகிறார்கள்,'' அசோஜன் கூறினார்.

ஆகவே, இம்முறை புதிய இயல்பில் நடைபெறும் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தலில், சவால்மிக்க ஒன்றாக அமையும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இதற்கு முன்னதாக, இம்மாதம் 10-ஆம் தேதி இளைஞர் பகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் வாக்களிப்பு இம்மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இளைஞர் மற்றும் மகளிர்ப் பிரிவுகளுக்கான ஆண்டுக் கூட்டத்தின் போது நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சி தேர்தலின் போது, அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை, எஸ்.ஓ.பி. முறையாக பின்பற்றப்படுவதுடன் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே இதில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்று அவர் தீர்க்கமாக கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]