விளையாட்டு

கூடைப்பந்து: தைவானில் நிபுணத்துவப் பயிற்சிக்காக மூவர் தேர்வு

21/10/2021 08:39 PM

சிலாங்கூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் கூடைப்பந்து விளையாட்டாளர்கள் தங்கள் கல்வியிலும் ஆட்டத் திறனிலும் சமமாக பட்டைத் தீட்டப்பட்டு, அனைத்துலக போட்டிகளில் மிளிர்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கான உபகாரச் சம்பளத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் வாயிலாக நாட்டின் மூன்று கூடைப்பந்து விளையாட்டாளர்கள், தைவானில் உள்ள புகழ்பெற்ற கல்வி கழகத்தில், நிபுணத்துவப் பயிற்சியுடன் கற்றல் நடவடிக்கையிலும் ஈடுபட, உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர். 

அவர்கள், இம்மாத  இறுதியில் தைவானிற்கு பயணமாக விருக்கின்றனர்.

புத்ராஜெயா கூடைப்பந்து சங்கம் மற்றும் புக்கிட் ஜாலில் விளையாட்டு பள்ளியின் ஒத்துழைப்புடன் GOSTRONG கூடைப்பந்து பயிற்சி மையம், இந்த திட்டத்திற்கு, அகில் டேனியல் ஃபாரிட், ஜெரேமியா ஃபிலிப்,  மற்றும் அட்லி நஜ்டாத் அஸ்வான்டின் ஆகியோரைத் தேர்வுச் செய்திருக்கிறது.

இதில், அகில் மற்றும் ஜெரேமியா தாயுவான் யுங் பிங் தொழில்நுட்ப உயர் பள்ளியிலும்,அட்லி, சுங் யூவான் கிறிஸ்துவ பல்கலைகழகத்திலும் உபகாரச் சம்பளத்துடன் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்குவதற்கான அரிய வாய்ப்பு தமது மகனுக்கு கிடைத்திருப்பது, தமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, அகிலின் தாயார் ஃபௌசியா சுல்தான் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, இத்திட்டத்தின் கீழ், ஜி.வி தாயாளன் எனும் கூடைப்பந்து  விளையாட்டாளர், BASKETBALL LEAGUE உயர்பள்ளியில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக, GOSTRONG கிளப்பின் தோற்றுநர் மற்றும் பயிற்சியாளருமான முஹமட் இஸ்சாட் தெரிவித்தார்.

தற்போது அதிகாரப்பூர்வமாக பொதுவில் திறக்கப்பட்டிருக்கும் இந்த உபகரச் சம்பளத் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள  15 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்ட விளையாட்டாளர்களின் பெற்றோர்கள் தமது தரப்பை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]