உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு - 22102021

22/10/2021 05:54 PM

ஜெனீவா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்நோக்கும் உலகின் தெற்குப் பகுதிகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், WHO வலியுறுத்தி இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உலக அளவில் 40 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற WHO-வின் இலக்கை அடைவதில் இன்னும் 50 கோடி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அதன் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியைசஸ் தெரிவித்தார்.

உலகின் மேற்கு பகுதியிலுள்ள நாடுகள் 24 கோடி தடுப்பூசியைப் பயன்படுத்தாத நிலையில் வைத்திருப்பதாக தெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டார். பல நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தளர்வு வழங்கப்பட்டத்தினால் அங்கு கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் புதிய உறுமாறிய தொற்றுகளும் அடையாளம் காணப்படுவதாக WHO கூறியது.

இதனிடையே, சிலருக்கு 'மிகவும் அரிதான' மாரடைப்பு நோய் ஏற்படுவதால் இளைஞர்களுக்கு மொடெர்னா கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துவதற்கான ஆய்வு, ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், உலகில் கொவிட்-19 பெருந்தொற்றினால் பலியான சுகாதார ஊழியர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80,000-ஐ எட்டியிருக்கலாம் என்று WHO தகவல் வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் தடுப்பூசிகள் சமமான முறையில் விநியோகிக்கப்படாததும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததும் அதற்குக் காரணம் என்று தெட்ரோஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

119 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சராசரியாக ஐந்தில் இரண்டு சுகாதாரத் துறை ஊழியர்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மெல்போர்ன், ஆஸ்திரேலியா

கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலகிலேயே மிக நீண்டக் காலமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சுமார் 9 மாதங்களுக்குப் பின்னர், முழுமையான தடுப்பூசிப் போட்டுக் கொண்ட மக்கள், உணவகங்களில் அமர்ந்து உண்ணுவது உட்பட பல தளர்வுகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதார 15 லட்சம் கோடி அமெரிக்க டாலார் வரை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டில், தற்போது 70 விழுக்காட்டு மக்கள் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வேலிங்கடன், நியூசிலாந்து

நியூசிலாந்தில், 90 விழுக்காட்டு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னரே அந்நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொவிட்-19 நோயைத் துடைத்தொழிப்பதில் இருந்து, தடுப்பூசி மூலம் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தமது இலக்கை மாற்றியிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து எலிசபெத் ராணி சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மருத்துவமனையில் ஒரு நாள் தங்கியிருக்கிறார்.

அவருக்கு மருத்துவமனையில் ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர் மாளிகை திரும்பிவிட்டதாகவும் அரச அதிகாரிகள் கூறினர். எனினும் அவரது உடல்நலக் குறைவு, கொவிட்-19 நோய்த்தொற்றுடன் சம்பந்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]