பொது

தீபத் திருநாளை வண்ணமயமாக்கும் கோலங்களின் ஜாலம்

27/10/2021 07:52 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி பண்டிகை என்றாலே, ஒளியூட்டும் பிரகாசமான விளக்குகளும், வண்ண நிற கோலங்களும் அங்கம் வகிக்கும்.

அதிலும் குறிப்பாக, தீபாவளியை வண்ணமயமாக மாற்றுவதற்கு பல வகையான ரங்கோலி கோலமிடுவது வழக்கமாகும்.

இந்த ரங்கோலி கோலங்கள் இந்தியர்களை மட்டுமின்றி இதர இனத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, தற்போது அவர்களும் கோலமிடுவதில் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகிறது.

மற்ற இனத்தவர்களும் கோலமிடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது, இந்தியர்களின் கலை கலாச்சாரத்தை அவர்கள் தெரிந்து கொள்வதோடு, இது ஒற்றுமையை இன்னும் மேலோங்க செய்கிறது.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், பேரங்காடிகளிலும், அலவலகங்களிலும், பொது இடங்களிலும், கோலமிடுவது தற்போது வழக்கமாகி வருகிறது.

அவ்வகையில், தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி இருக்கும் நிலையில், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் நுழைவாயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை ரங்கோலி கோலமிடப்பட்டது.

பல இனத்தை சேர்ந்த பெர்னாமா பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கோலமிட்டனர்.

இந்தியர்களுடன் கோலமிடுவது வழக்கமான ஒன்று என்றாலும், தமது இதர இனத்து நண்பர்களுடன் சேர்ந்து கோலமிடும் அனுபவம் சற்று மாறுப்பட்டு இருப்பதாக பெர்னாமா பணியாளர் புவா டேவிட் தெரிவித்தார்.

''இது என் முதல் அனுபவம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளி ஆட்கள் வந்து கோலமிட்டனர். இம்முறை பெர்னாமா நண்பர்களுடன் சேர்ந்து கோலமிடுவது மாறுப்பட்ட அனுபவம். இதை முழுமையாக செய்து முடிக்க சுமார் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. இந்த கோலமிடும் போது, இதர இனத்தருடன் தகவலை பரிமாரிக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது,'' என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர் இந்த ரங்கோலி கோலங்களை பார்த்து ரசித்த வேளையில், இவ்வாண்டு தங்கள் கைகளாலே இந்த கோலத்தை இடுவதற்கு வாய்ப்பு கிட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, புதிய அனுபவமாக இருப்பதாக பெர்னாமா பணியாளர்கள் சிலர் கூறினர்.

''எப்பொழுதும் நாங்கள் வெளி ஆட்களை அலங்கரிக்கும்படி கேட்டுக்கொள்வோம், ஆனால், இவ்வாண்டு இந்த கோலத்தை நாங்களே உருவாக்கினோம். ஒரு மலேசிய குடும்பமாக நாங்கள் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்,'' என்று பெர்னாமா பணியாளரான சரினா ரோசாலி தெரிவித்தார்.

''இதற்கு முன் நான் இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை. எனவே இந்தக் கோலத்தை தயார் செய்வதன் மூலம் பெர்னாமாவுக்குச் சிறிதளவு பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்று மற்றொரு பணியாளரான ஃபதேஹா யூசோஃப் கூறினார்.

கோலமிடுவது புதியதொரு அனுபவத்தை வழங்கியிருப்பதால், அடுத்த ஆண்டும் கோலமிடும் நடவடிக்கையில் கலந்து கொள்ளவிருப்பதாக அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)