விளையாட்டு

ஓடும் குதியிரையின் மேல் அமர்ந்து அம்பு எய்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் ருபேந்திரன்

28/11/2021 08:12 PM

கோலாலம்பூர், 28 நவம்பர் (பெர்னாமா) -- குறிபார்த்து அம்பு எய்தல் என்பதே சாவாலான விளையாட்டுதான். அதிலும் ஓடும் குதியிரையின் மேல் அமர்ந்து அம்பு ஏய்வது? அதனை சாதனையாக்கி, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கின்றார், 29 வயதுடைய ருபேந்திரன் சிவகுருநாதன்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, வேலை நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ருபேந்திரன் சிவகுருநாதன் தமது சொந்த ஊரான மலாக்காவில் இருந்து, நெகிரி செம்பிலானிற்கு சென்றிந்தார்.

அந்த நேர்காணலில் வெற்றிபெறததால், மன விரக்தி அடைந்த ருபேந்திரன் அருகிலுள்ள கோலா பிலா, லாடாங் ஆலம் வரிசானுக்கு ஓய்வெடுக்கச் சென்றார்.

அப்போது, அந்த பண்ணையின் உறுமையாளரான முஹமட் அக்மால் முஹமட் டாலான், குதிரை ஓட்ட அம்பு எய்தல் விளையாட்டு குறித்த தகவல்களை ருபேந்திரனிடம் பகிர்ந்து கொண்டதோடு, அவருக்கு பயிற்சியாளரும் ஆனார்.

மலாக்கா, இகுயின் லடாம் மேரா குதிரை மையத்தில், மூன்று வருடங்கள் குதிரை சவாரி செய்வது உட்பட பல்வேறு நுணுக்கங்களை கற்று கொண்ட ருபேந்திரன், கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இவ்விளையாட்டின் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

பண்டைய காலம் முதலே, இந்தியர்களுக்கு இக்கலை பரிட்சியமான ஒன்று என்றாலும், தற்போது இக்கலை குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக ருபேந்திரன் கூறினார்.

''நீண்ட காலமாக இந்த கலை குறித்து நமக்கு தெரியும். இந்த கலையை ராமாயண மகாபாரத கதைகளில் கேட்டு, பார்த்து இருப்போம். இது தற்காப்பு கலையாக நாம் அறிந்திருந்தாலும், இதன் நன்மை சொல்லில் அடங்கா,'' என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவ்விளையாட்டில் ஈடுபட்டு வரும் ருபேந்திரன், பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பதோடு, புதிய சாதனைகளை படைக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

''இதனை தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பல போட்டிகள் நடைப்பெறவிருக்கின்றன. அதனில் பங்கேற்று சாதனை புரிவது எனது இலக்காகும்,'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, அதிகமான மலாய்காரர்கள் ஈடுபட்டு வரும் இந்த விளையாட்டில், இந்தியர்களும் பங்கேற்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

தற்போது, மலாக்காவில் சுமார் அறுவருக்கு இக்கலையை ருபேந்திரன் பயிற்று வருகிறார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]