பொது

உணவு விலையை உயர்த்த மாட்டோம் - பிரெஸ்மா

28/11/2021 08:24 PM

கோலாலம்பூர், 28 நவம்பர் (பெர்னாமா) -- தற்போது, நாட்டில் காய்கறிகளின் விலையேற்றம் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதை மறுக்க முடியாது. 

இந்த விலையேற்றத்திற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பயனீட்டாளர்களின் நன்மை கருதி, தமது தரப்பின் கீழ் செயல்படும் உணவங்கங்களில், உணவுகளின் விலைகள் உயர்த்தப்படாது என்று பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் உறுதி அளித்துள்ளது.

சந்தைகளில், காய்கறிகளின் விலை சுமார் 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக அண்மையில், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு கூறியது. 

காய்கறிகள் மட்டுமின்றி மீன், கோழி, முட்டைகள் என்று அடிப்படை உணவு பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்வு கண்டிருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைகின்றனர்.

அதன் தாக்கம் தற்போது  உணவகங்களில் இருக்கும் என்ற மக்களின் நியாயமான அச்சத்தை களையும் வகையில், பிரிஸ்மாவில் பதிவு செய்துக்கொண்டிருக்கும் உணவகங்களில், இவ்வாண்டு இறுதிவரையில் உணவின் விலை உயர்த்தப்படாது என்று அதன் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தய்யூப்கான் கூறுகின்றார். 

''தயவுசெய்து உணவின் விலையை உயர்த்தாதீர்கள் என்று உணவத்தாரைக் கேட்டுக்கொள்கிறேன். விலைக் கட்டுப்பாட்டில் கவனமாக இருந்து, நாட்டிற்கு மக்களுக்கும் நம்மால் இயன்ற இந்த பங்களிப்பை நாம் வழங்குவோம். அடிப்படையில் மக்களின் விரும்பி உண்ணும் உணவுகளில் நாம் லாபத்தை பார்க்கக்கூடாது'',  என ஜவஹர் அலி கூறினார். 

லாப நோக்கம் இருந்தாலும், தங்களின் உணவகத்தார் அதில் நியாயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியிறுத்தினார். கொவிட் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், உணவகங்களில் உணவின் விலையேற்றம் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதை தமது தரப்பு உணர்ந்துள்ளதாகவும் ஜவஹர் அலி தெரிவித்தார்.

அதேவேளையில், தரமான உணவு, தூய்மையான இடம் போன்ற சுகாதார விவகாரங்களில்  சமரசம் செய்துகொள்ளாது என்பதால், உணவகங்களுக்குச் செல்லும் பொது மக்கள் அதில் கவனமாக இருப்பதுடன், விலைப் பட்டியலையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

''கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் உங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காதீர்கள். விலைப்பட்டியலைப் பார்த்து விவேகமாக செயல்படுங்கள். சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தூய்மையான உணவகங்களுக்குச் செல்லுங்கள்'', என ஜவஹர் தெரிவித்தார். 

இதனிடையே, கொவிட்19 பெருந்தொற்று தாக்கம் தொடங்கி, உணவக தொழில் துறையச் சார்ந்தவர்கள் பெரும் பாதிப்பை அடைந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

எனவே, தங்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் ஆள்பற்றாக்குறை விவகாரத்தில் விரைந்து சிறந்த தீர்வை காண வேண்டும் என்பதும் அவரின்  கோரிக்கையாக உள்ளது. 

''ஆள்பற்றாக் குறையால், எங்களுக்கு சம்பள பிரச்சனை ஏற்படுகிறது. மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணனிடம் இது குறித்து பேசி இருக்கின்றோம். எங்களின் நிலமையை அரசாங்கம் கருணையோடு சீர்த்தூக்கிப் பார்த்து எங்களுக்கு உதவ முன்வரவேண்டும்'',  என்று தொலைபேசி அழைப்பின் வாயிலாக ஜவஹர் பெர்னாமாவிடம் தெரிவித்தார். 

 

-- பெர்னாமா