பொது

தாய்மொழிப் பள்ளிகள் மீது இனவாதக் கொள்கை வேண்டாம்

30/11/2021 08:29 PM

கோலாலம்பூர், 30 நவம்பர் (பெர்னாமா) -- தாய்மொழிப் பள்ளிகள் மீது குறி வைத்து தாக்கும் படலம் நாட்டில் ஒரு தொடர் கதையாக நீண்டு வருகிறது.

அரசாங்கத்தில் பல தலைமைத்துவ மாற்றங்கள் நிகழ்ந்து வந்த போதிலும் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளைத் தற்காக்க இன்னமும் பல போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமாகத்தான் உள்ளன.

தமிழ், சீன பள்ளிகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவாதங்கள் கிடைப்பதற்காக பல தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் வேளையில் தாய்மொழிப் பள்ளிகளை மூடுவதிலேயே சில தரப்பினர் செயல்பட்டு வருவது மறுப்பதற்கில்லை.

தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல நிலைகளில் பின் தங்கி இருப்பதால் அப்பள்ளிகளை மூடிவிட்டு அதற்கு மாற்றாக ஒருமைப்பாட்டு பள்ளிகளை முழுமையாக அமல்படுத்துமாறு சில தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது இந்திய சீன சமுதாயத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தாய்மொழிப் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூன்று மலாய் அமைப்புகள் தொடுத்த வழக்கிற்கு அடுத்த மாதம் 29-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில் தாய்மொழிப்பள்ளிகளைக் கட்டம் கட்டமாக மூட வேண்டும் என்றும் பிழைப்பிற்காக மலேசியாவிற்கு வந்த வங்காளதேசிகள் கூட மலாய் மொழியில் சிறந்து விளங்கி வருவதாகவும் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஸ்ராஃப் முஸ்தாகிம் பட்ருல் முனிர் நேற்று கேலியாக உரையாற்றியுள்ளார்.

இந்த இனத்துவேஷமான பேச்சும் மற்ற இனங்களைச் சிறுமைப்படுத்தும் விமர்சனமும் அவரின் முதிர்ச்சியற்ற அரசியல் நிலைத்தன்மையைக் காட்டுவதாக ம.இ.கா-வின் உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி. மோகன் சாடினார்.

''தமிழ்ப்பள்ளியையும் ம.இ.காவையும் பிரிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். எனவே இந்நாட்டில் ம.இ.கா இருக்கும் வரையில் தமிழ்ப்பள்ளிகளை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. எந்த தலைமைத்துவத்திலும் ம.இ.கா தமிழ்ப்பள்ளிகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதேபோன்று ஒரு மொழியைக் கற்பது அவரவர் உரிமையாகும். யார் எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். வங்காளதேசிகள் சரளமாக மலாய்ப் பேசுகிறார்கள் என்றால், இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் கூட சிறப்பாக மலாய் பேசுவது மறுக்க முடியாது. அதற்காக இப்படி ஒரு விமர்சனம் செய்வது மிகவும் தவறாகும்,'' என்று அவர் கூறினார்.

நாட்டில் 200 ஆண்டுகளைக் கடந்து தமிழ்மொழி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருக்கும் வேளையில் இதுபோன்ற சலசலப்புகளைக் கண்டு இந்திய சமுதாயம் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் போதிய அளவிற்கு புலமை இல்லாதவர்களாக இருப்பதாகவும் அதனால் அரசாங்க வேலை வாய்ப்புகள் அவர்களின் கையைவிட்டு நழுவுவதாகவும் புதுக் கரிசணத்துடன் சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று தமக்கு வியப்பை ஏற்படுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் தெரிவித்தார்.

''தமிழ்ப்பள்ளியிலிருந்து கல்வி கற்று முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைக்காமல் போனது பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. அதேபோன்று பல்கலைக்கழகங்களில் நாம் முன்வைத்த துறைகளுக்கும் பெருமளவில் வாய்ப்பு கிட்டவில்லை. அதுவும் அத்துறைகளில் உயர்கல்வி பயில்வதற்கு மாணவர்களுக்கு முழு தகுதி இருந்தும் கூட அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. இன்னும் உபகாரச் சம்பள விண்ணப்பத்திலும் பலர் ஏமாற்றம் அடைந்தது மறுப்பதற்கில்லை,'' என்று அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழிப் பள்ளிகளை முடக்க வேண்டுமென்று ஒரு தரப்பு முழங்கிக் கொண்டிருந்தாலும் இன்னமும் தமிழ் சீன பள்ளிகளில் மலாய் மாணவர்கள் அதிகளவில் ஆரம்பக் கல்வியைப் பயின்றுக் கொண்டிருப்பதையும் கணபதிராவ் கோடிக் காட்டினார்.

பல்வேறு துறைகளில் பீடுநடைப்போட்டு வரும் சாதனையாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்தாம் என்று சுட்டிக்காட்டிய கணபதி ராவ், தமிழ், சீனத்திற்கு முழுக்குப் போடும் இவர்களின் இனவாதக் கொள்கை மட்டுமே இம்மொழிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, தாய்மொழிப் பள்ளிகள் பற்றி எவ்வித அவதூறான கருத்துகளை வெளியிடுவதற்கு முன்னதாக, அது குறித்த சட்டங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தெரிவித்தார்.

''தமிழ், சீன பள்ளிகளை யாரும் அசைக்க முடியாத சில சட்டங்கள் நாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளன. 1952,1957, 1961,1996 ஆகிய சட்டங்கள் தாய்மொழிப்பள்ளிகளைக் காக்க நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்மொழி நாட்டில் முடக்கப்பட்டுவிடும் என்று யாரும் அச்சப்பட வேண்டாம்,'' என்றார் அவர்.

கடந்த காலங்களில் சீக்கிய மற்றும் தெலுங்கு மொழிப் பள்ளிகளும் நாட்டில் அதிகளவு இருந்தாலும், அப்பள்ளிகளை மூடுவதற்கு யாரும் வலியுறுத்தவில்லை.

மாறாக, அம்மொழிக்குரியவர்கள் கால ஓட்டத்தில் திசைக்கு ஒரு பக்கமாகச் சென்றதால் அப்பள்ளிகள் மூட வேண்டிய நிலைக்கு ஆளானதையும் முருகையா சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)