விளையாட்டு

முதலாவது உலக காது கேளாதோர் கராத்தே போட்டி: வெண்கலம் வென்றார் வி.இளமாறன்

01/12/2021 08:00 PM

தெஹ்ரான், 01 டிசம்பர் (பெர்னாமா) -- ஈரான், தெஹ்ரானில் நடைப்பெற்ற, 2021-ஆம் ஆண்டுக்கான முதலாவது உலக காது கேளாதோர் கராத்தே போட்டியில், தேசிய விளையாட்டு வீரர், வி.இளமாறன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இது நாட்டிலுள்ள காது கேளாத கராத்தே விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், ஒரு தூண்டுகோலாகவும் அமையும் என்று, மலேசிய காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின், தேசிய கராத்தே பயிற்றுநர் விக்ணேஸ்வரன் வரதராஜு தெரிவித்திருக்கின்றார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்காக பிரத்தியேகமாக கராத்தே வகுப்பு தொடங்கப்பட்டது.

இதில், இளமாறன் உட்பட பல காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளில் கலந்து கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்று வருவதாக அவர் கூறினார்.

''உள்நாடில் மற்றும் வெளிநாடுகளில் நடைப்பெற்ற பல போட்டிகளுக்கு என் மாணவர்களைஅழைத்துச் சென்றுள்ளேன். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதோடு, பதக்கங்களையும் வென்றுள்ளனர்,'' என்று அவர் தெரிவித்தார்

இந்நிலையில், கடந்த நவம்பர் 18 முதல் 25-ஆம் தேதி வரையில் ஈரான், தெஹ்ரானில் நடைப்பெற்ற 2021-ஆம் ஆண்டுக்கான முதலாவது உலக காது கேளாதோர் கராத்தே போட்டியில், ஆண்களுக்கான 84 கிலோகிராம் எடைக்கு குறைவான குமிடே பிரிவில் இளமாறன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அனைத்துலக ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில், மலேசிய காது கேளாத விளையாட்டாளர் முதல் முறையாக பங்கேற்று, பதக்கம் வென்றிப்பது, பெருமைக்குரிய ஒன்று என்று விக்ணேஸ்வரன் கூறினார்.

கொவிட்-19 நோய் காலக்கட்டத்தில், விளையாட்டளர்களுக்கு பயிற்சி வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், மனம் தளராது அவர்கள் அதிக ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை பிரசிலில் நடைபெறும் DEAFLYMPICS போட்டிக்காக விளையாட்டாளர்களை தமது தரப்பு தயார்ப்படுத்தி வருவதாக விக்ணேஸ்வரன் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]