அரசியல்

குறுகிய காலத்தில் 15ஆவது பொதுத்தேர்தலை நடத்துவது ஏற்புடையதல்ல

16/05/2022 07:05 PM

லங்காவி, 16 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் 15ஆவது பொதுத் தேர்தலை குறுகிய காலத்தில் நடத்துவது ஏற்புடையதாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  மீண்டும் தெரிவித்திருக்கின்றார்.

நாட்டில் கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் மீண்டும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை லங்காவி நாடாளுமன்றத்தின் நோன்பு பெருநாள் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர 15ஆவது பொதுத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியபோது துன் டாக்டர் மகாதீர் அவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை கொவிட்-19 நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 75 ஆயிரத்து 873-ஆக பதிவாகியிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, புதிய தொற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கும் செயல்பாட்டு தர விதிமுறை  பின்பற்றப்படுவது தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)