சிறப்புச் செய்தி

அருங்காட்சியகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருங்காட்சியக தினம்

18/05/2022 08:17 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) -- வரலாற்று சான்றுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் உலகில் உள்ள அருங்காட்சியகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில், அருங்காட்சியகங்களின் மதிப்பு குறித்து மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மே 18-ஆம் தேதி அருங்காட்சியக தினம் அனுசரிக்கப்படுகின்றது.

1977-ஆம் ஆண்டு தொடங்கி அனைத்துலக அருங்காட்சிய மன்றம் இத்தினத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.

அருங்காட்சியகங்களின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகள் மீது உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

'அருங்காட்சியகங்களின் சக்தி' என்றக் கருப்பொருளுடன் இவ்வருட அருங்காட்சிய தினம் கொண்டாடப்படுகின்றது.

அருங்காட்சியகங்கள் மூலம் உலகில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதே இக்கருப்பொருளின் நோக்கமாகும்.

இத்தினத்தை முன்னிட்டு இன்று பல நாடுகளில் அருங்காட்சியங்களுக்குள் இலவசமாக நுழைய பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 158 நாடுகளில் உள்ள 37 ஆயிரம் அருங்காட்சியங்கள் இத்தினத்தை அனுசரித்தன.

மலேசியாவில் தேசிய அருங்காட்சியகத் துறையின் கீழ் 20 அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு 395 புதிய அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

தற்போது அந்நாட்டில் ஆறாயிரத்து 183 அருங்காட்சியங்கள் இருக்கும் நிலையில், உலகில் அதிக அருங்காட்சியங்கள் கொண்ட நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்றது.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)