விளையாட்டு

ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டி: தென் கொரியாவை வீழ்த்திய மலேசியா

25/05/2022 07:38 PM

ஜகார்த்தா, 25 மே (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 2022-ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டியின் B குழுவுக்கான ஆட்டத்தில் ஏ.அரூல் செல்வராஜ்  தலைமையிலான மலேசிய அணி தென் கொரியாவை 5-4 என்று தோற்கடித்தது.

ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த மலேசியா ஆறு நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு கோலை அடித்தது.

அதன் பின்னர், 25-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து தென் கொரியா மலேசிய அணியை நெருங்கியது.

இருப்பினும், 27 மற்றும் 32-வது நிமிடங்களில் மலேசியா மேலும் இரு கோல்களை அடித்து முன்னணி வகித்தது.

இடைவிடாத முயற்சியினால் தென் கொரியா இரு கோல்களை அடித்து மலேசியாவை மீண்டும் நெருங்க ஆரம்பித்தது.

மலேசியாவுக்கான வெற்றி கோலை முஹம்மாட் ராசீ அடித்த வேளையில், தென் கொரியாவின் நான்காவது கோலை ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் யாங் ஜிஹுன் அடித்தார்.

இந்த வெற்றியின் வழி ஆறு புள்ளிகளுடன் இருக்கும் மலேசியா, குழுக்களுக்கான இறுதி ஆட்டத்தில் வரும் வியாழக்கிழமை வங்காளதேசத்துடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)