கோலாலம்பூர், 25 மே (பெர்னாமா) -- சமையலுக்கு உப்பு எந்த அளவிற்கு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு உலக மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு நெகிழியின் தேவைகள் இன்றியமையாததாக உள்ளன.
என்னதான் நெகிழியின் பயன்பாடு குறித்தும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பொலிகள் தொடர்ந்து எழுந்த வண்ணமாக இருந்தாலும், அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறைந்தே காணப்படுவது மறுப்பதற்கில்லை.
நெகிழிப் பயன்பாட்டைக் கூடுமானவரை குறைத்துக் கொள்ளாவிடில் வருங்கால தலைமுறை மிகப்பெரிய இயற்கை மாசுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று அது தொடர்பிலான ஆர்வலர்களும் நிபுணர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உலக அளவில் ஆண்டுக்கு ஆறு கோடி டன் நெகிழிகள் பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த 1950-ஆம் ஆண்டில் 23 லட்சம் டன்னாக இருந்த நெகிழி உற்பத்தி, 2015-ஆம் ஆண்டில் 40 கோடியே 48 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது.
அவற்றுள் 9 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும் என்ற நிலையில், 12 விழுக்காட்டு நெகிழிகள் எரிப்பதன் மூலமாக அழிக்கப்படுகின்றன.
இதைத் தவிர்த்து இதர 79 விழுக்காட்டு நெகிழிக் கழிவுகள் கடல் உட்பட நீர் நீர்நிலைகளிலும் குப்பை மேடு போன்ற தரைத்தளங்களிலும் வீசுபடுவதால் பல்வேறு வகையிலான மாசுபாட்டினை இயற்கை எதிர்கொள்ள நேரிடுவதாக பினாங்கு மாநில பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
''தீபகற்ப மலேசியாவில் ஒரு வருடத்திற்கு 46 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்படுவதாக தெரியவருகிறது. அதேவேளையில் ஆண்டுதோறும் மூன்று விழுக்காட்டு குப்பைகள் இதில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி உருவாக்கப்படும் குப்பைகளில் நெகிழியே முன்னணியில் இருக்கின்றது,'' என்று அவர் கூறினார்
அதுமட்டுமின்றி, கடலோர நாடுகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சுமார் 80 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
அதேவேளையில், அழிந்து வரும் நிலையில் உள்ள ஜீவராசிகள் உட்பட 700 உயிரினங்கள் நெகிழியால் பாதிப்பின் விளம்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நெகிழிகளில் கோடான கோடி பொருட்களை உற்பத்தி செய்து வந்தாலும் அவற்றுள் நெகிழிப் பைகளே மக்களின் புழக்கத்தில் அதிகம் உள்ளன.
கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது கிடைக்கும் நெகிழிப்பை மற்றும் POLYSTYRENE எனப்படும் நுரைப்பத்தை தூக்கி எறிந்தால் அது முற்றாக அழிந்து போவதற்கு ஆயிரம் ஆண்டுகள் வரை அவகாசம் தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளதாகவும் சுப்பாராவ் குறிப்பிட்டார்.
''ஆகவே, கடையில் பொருட்கள் வாங்கச் செல்லும்போது மறவாமல் வீட்டிலிருந்து துணியினால் ஆன பைகளைக் கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி தாங்கள் பெறும் நெகிழிப் பைகளை சேர்த்து வைத்து மீண்டும் கடைக்காரரிடமே வழங்கினால் அவர் அவற்றை மற்ற வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்,'' என்றும் சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.
நெகிழ்ப் பைகளின் பயன்பாடு இப்படியே தொடர்ந்தால் நான்கைந்து தலைமுறைக்கு நெகிழி சாகாவரம் வரம் பெற்று சுற்றுச்சூழலை மென்மேலும் பாழ்ப்படுத்தும் என்றும் சுப்பாராவ் நினைவுறுத்தினார்.
இன்று மே 25-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக நெகிழிப் பயன்பாடற்ற தினத்தை முன்னிட்டு பேசிய அவர், கூடுமானவரை நெகிழிகளின் பயன்பாட்டினை குறைத்து கொள்ளுமாறும் பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை