விளையாட்டு

மரடோனாவிற்கு சமர்ப்பணம் செய்ய சிறப்பு விமானம்

26/05/2022 07:49 PM

மோரோன், 26 மே (பெர்னாமா) -- அர்ஜெண்டினாவின் காற்பந்து சகாப்தமான டியாகோ மரடோனா மறைந்திருந்தாலும் அவரது புகழை காற்பந்து உலகம் என்றும் மறக்காது என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது. 

இவ்வாண்டு இறுதியில் கட்டாரில், நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியை முன்னிட்டு, அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில், சிறப்பு பயணத்திற்காக விமானம் ஒன்றை அர்ஜெண்டினா உருவாக்கி உள்ளது. 

2020-ஆம் ஆண்டு நவம்பரில் மாரடைப்பால் மரணமடைந்த முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளரான மரடோனாவின்  நினைவாக 12 இருக்கைகள் கொண்ட TANGO D10S எனும் விமானம்,  ஒரு விமான அருங்காட்சியகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் உலக கிண்ணப் போட்டிக்கு கட்டாருக்குச் செல்வதற்கு முன்பு, அந்த விமானம் முதலில் அர்ஜென்டினாவைச் சுற்றி பயணிக்கவுள்ளது, 

மரடோனாவின் படங்களும், அக்கிண்ணத்தை அவர் முத்தமிடும் காட்சிகளும் அந்த விமானத்தில் பதிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, 1986 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றபோது போடப்பட்ட, மரடோனாவின் இரண்டு வெற்றிக் கோல்களின் படங்கள் அந்த விமானத்தின் இறக்கை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள காணொளி வெளியிட்டப்பட்டது. 
 

-- பெர்னாமா