கோலாலம்பூர், 26 மே (பெர்னாமா) -- அண்மையில் ஓ.பி.ஆர் (OPR) எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா அதிகரித்திருக்கின்றது.
இந்நடவடிக்கை வாழ்வாதாரத்தின் அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இதனை அதிகரிப்பதற்கு தகுந்த காரணங்கள் இருப்பதாக சிலாங்கூர் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் சம்மேளனத் தலைவர் முனைவர் டத்தோ வி.ஷண்மூகநாதன் தெரிவித்தார்.
ஓ.பி.ஆர் வட்டி விகிதம் 1.75 விழுக்காட்டில் இருந்து 25 அடிப்படை புள்ளிகளினால் 2.0 விழுக்காடாக அதிகரிப்பதாக பேங்க் நெகாராவின் நிதிக் கொள்கை செயற்குழு (எம்.பி.சி) கடந்த மே 11ஆம் தேதி அறிவித்திருந்தது.
இந்த வட்டி விகிதத்தின் அதிகரிப்பிற்கு கால அவகாசம் இல்லை என்றும் ஒரே இரவில் மாறக்கூடியது என்றும் இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் டத்தோ டாக்டர் வி. ஷண்மூகநாதன் இவ்வாறு விளக்கமளித்தார்.
'ஓ.பி.ஆர் என்பது வங்கிகளுக்கு கிடைக்கக்குடிய வட்டி. ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கு பணம் பற்றாக்குறை பட்சத்தில் இதர வங்கிகளிடமிருந்து கடனைப் பெறுவர். அவ்வாறு பெறும் போது விதிக்கப்படுவதே ஓ.பி.ஆர் வட்டி,' என்றார் அவர்.
கடந்த காலங்களில் தனிப்பட்ட வங்கிகளே தங்களுடைய தேவை மற்றும் விநியோகிப்பு அடிப்படையில் இந்த வட்டி விகிதத்தை நிர்ணயிப்பர்.
1997-ஆம் ஆண்டு தொடங்கி பேங்க் நெகாரா இதனைக் நிர்ணயிக்கத் தொடங்கியது.
அண்மையில், கொவிட்-19 காலக்கட்டத்தில் இந்த OPR வட்டி விகிதம் குறைவாக இருந்ததையும் அவர் மறுக்கவில்லை.
'இந்த ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை அதிகரிப்பதினால் ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் பாதிக்காது. வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் ரிங்கிட்டின் மதிப்பும் பாதிக்கப்படும்,' என்றார் அவர்.
அரசாங்கம் ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது பல்வேறு கோணங்களில் ஆராயும் என்றுக் கூறிய ஷண்மூகநாதன் அது அதிகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுப்படுத்தினார்.
இருப்பினும், இந்த வட்டி விகிதத்தில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்படாது என்றும் பேங்க் நெகாரா அதனை கட்டம் கட்டமாகவே அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை