பொது

தேசிய ஊடகவியலாளர் தினத்திற்கான முன்னேற்பாடுகள் மும்முரம்

28/05/2022 07:03 PM

பண்டார் ஹிலிர், 28 மே (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக உழைத்த முன்னணி பணியாளர்களில், ஊடவியலாளர்களின் பங்கும் அளப்பரியதாகும்.

கடந்த ஈராண்டுகளாக சமுதாயக் கடப்பாட்டுடன் பணியாற்றிய அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், இரண்டாவது முறையாக, நாளை தேசிய ஊடகவியலாளர் தினம், HAWANA 2022 கொண்டாடப் படுகிறது.

இதற்காக, ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் சரித்திர மாநிலமான மலாக்காவில் ஒன்றுகூடி இருக்கின்றனர்.

மலேசிய ஊடகத் துறையை போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் இந்தோனேசியா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

'மக்கள் குரல் மற்றும் நாட்டின் எதிர்ப்பார்ப்பு'' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்படும் இத்தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை மலாக்கா, பண்டார் ஹிலிரின் ஹட்டன் தங்கு விடுதியில் நடைபெறவுள்ளது.

சுமார் 700 ஊடகவியலாளர்கள் பங்கேற்கவிருக்கும் இவ்விழாவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்து கொள்வதோடு, இவ்விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கின்றார்.

அதேவேளையில், இவ்விழாவில் ஊடகத்துறையில் நிபுணத்துவம் கொண்ட ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் HAWANA 2022 விருதும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

'நான்காம் தொழில்துறை புரட்சியில் செய்தியாளர்களின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பினான கருத்தரங்குடன் இவ்விழா தொடக்கம் காண்கிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)