தோக்கியோ, 28 மே (பெர்னாமா) -- தாம் முடிவு எடுக்காத பட்சத்தில் டத்தோ சுரைடா கமாருடின் இன்னும் அமைச்சரவை உறுப்பினராக இருப்பதோடு, தோட்டத் தொழிற்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சராக வழக்கம்போல் தமது கடமையை ஆற்ற வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
சுரைடாவை சந்தித்து இதற்கான தெளிவான விளக்கம் ஒன்றை பெற்ற பின்னரே, அவரின் அமைச்சர் பதவி குறித்து முடிவுச் செய்யப்படும் என்பதால், அடுத்து நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளலாம் என்றும் பிரதமர் கூறினார்.
''அமைச்சராக அவர் இன்னும் பதவி விலகவில்லை. நானும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கவில்லை. எனவே, புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டம் வரையில் அவர் அமைச்சராகத்தான் இருப்பார். அவர் என்னை சந்திக்கும் வரை. அவர் என்னை சந்தித்தாலும், இது குறித்த முடிவை அவர் எடுத்துவிட்டாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனவே, அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதை நான் முடிவு செய்வேன். அதன் பின்னர், வேறோர் அமைச்சரை நான் நியமிப்பேன்,'' என இஸ்மாயில் சப்ரி கூறினார்.
சுரைடாவின் விவகாரம் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் வழியே தமக்கு தெரியும் என்றும், சுரைடா இதுவரை தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தொழிற்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, பெர்சத்து கட்சியிலிருந்து பி.பி.எம் எனப்படும் பங்சா மலேசியா கட்சியில் இணையவிருப்பதாக கடந்த மே 26-ஆம் தேதி சுரைடா அறிவித்திருந்தார்.
பிரதமர் ஜப்பானுக்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டிருக்கும் தருவாயில் இது நிகழ்ந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை