விளையாட்டு

சீ விளையாட்டு போட்டி: கராத்தேவில் தங்கம் வென்ற தங்கங்கள்

28/05/2022 08:00 PM

கோலாலம்பூர், 28 மே (பெர்னாமா) -- வியட்நாம் சீ விளையாட்டு போட்டியில், தேசிய விளையாட்டு மன்றமான எம்.எஸ்.என் நிர்ணயித்திருந்த மூன்று தங்க இலக்கைக் கடந்து, மலேசிய கராத்தே குழு நான்கு தங்கப் பதங்களை வென்றிருக்கிறது.

அந்த நான்கு பதக்கங்களையும், இந்திய சமுதாயத்தின் தங்கங்களே கைப்பற்றி இருப்பது, கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதில், தங்களின் அந்த வெற்றித் தருணங்களையும் அனுபவங்களையும் பெர்னாமாவோடு பகிர்ந்து கொள்கின்றனர், ஆர். ஷர்மேந்திரன் மற்றும் குகன் விஜயகுமார்.

சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானைச் னைச் சேர்ந்த ஆர்.ஷர்மேந்திரன் அம்மாநில கிளப் வழியாக தமது கராத்தே பயிற்சியைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, இன்று நாட்டைப் பிரதிநித்து நான்கு முறை சீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றார்.

அதில் தொடர்ச்சியாக மூன்று தங்கங்களை வென்று ஹட்ரிக் சாதனை செய்திருக்கும் அவர் இவ்வாண்டு குழுப்பிரிலும் தனிப்பிரிவிலும் இரு தங்கங்களை வென்றார்.

இந்திய சமுதாயம் மீது விழுந்திருக்கும் சில குறைகளை களைவதற்கு இதுபோன்ற சாதனைகள் மிகவும் அவசியமானது என்று கூறிய அவர், கராத்தேவில் நமது இளைஞர்களின் ஈடுபாடு இன்னும் அதிகமாக வேண்டும் என்றும் ஷர்மேந்திரன் கூறுகின்றார்.

''கல்வியின் எனுக்கு அதிக நாட்டமில்லை. ஆதலால்,விளையாட்டுத் துறையில் என் கவனத்தை திசை திருப்பி என் இலக்கில் வெற்றிப் பெற்றிருக்கின்றேன். என்னைச் சார்ந்தவர்களையும் நான் மகிழ்ச்சி படுத்தி இருப்பது எனக்கு பெருமைதான், எனது அம்மா எனக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கினார். எடுத்த முயற்சிகளில் தளர்வும் சோர்வும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறினால் நிச்சயம் நாம் சாதிக்க முடியும்'', என்று  அவர் தெரிவித்தார். 

இதனிடையே, தமது அண்ணன் ரவின் விஜயகுமார் வழியிலே கராத்தேவில் பயணிக்கத் தொடங்கிய குகன் விஜயகுமார், அவரை போல சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு விளையாடத் தொடங்கி இன்று வீட்டிற்கும் நாட்டிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.

விளையாட்டு, கல்விக்கு சுமையாகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், அதன் நேரங்களை ஓரளவுக்கு சமாளித்து, பயிற்சிகளில் பங்கேற்று தனது இலக்கில் குகன் வெற்றிக் கண்டதாகவும் கூறுகின்றார்.

''சாதனைகள் செய்வதற்கு முன்பு விளையட்டுக் களத்தில் பல சோதனைகள் வரும். அதனை நேர்த்தியாவும் சாரியாகவும் கையாண்டால் வெற்றி நிச்சயமாகும் அதற்கு நானே உதாரணம். என் அண்ணைப் பார்த்து எனக்கு கராத்தேவின் மீது ஆர்வம் வந்தது. அதனை சரியான முறையில் பயனன்படுத்திக்கொண்டேன். தேசிய கொடியை ஏந்திக்கொண்டு சென்ற அந்த தருணம் இன்னும் என் நினைவில் உள்ளது,'' என குகன் குறிப்பிட்டார். 

ஆசிய அளவில், நாட்டின் தேசியக் கராத்தே குழு பலம் பொருந்தியது என்பது, அதன் வெற்றிகளின் மூலம் பல இடங்களில் நிரூபனமாகி உள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் அதன் வீச்சு அதிகமாகி, தேசியக் கராத்தே குழு மிக உயரிய அங்கீகாரத்தைப் பெறும் என்று, வியட்நாம் சீ விளையாட்டு போட்டியின் கராத்தேவில் தங்கம் வென்ற ஆர். ஷர்மேந்திரனும், குகன் விஜயகுமாரும் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

சமுதாயத்தில், இளம் கராத்தே வீரர்களை உருவாக்குவதில் தலைமை பயிற்றுனர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் ஒரு போதும் தோல்வியடையாது என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

விளையாட்டு மட்டுமின்றி விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மாணவர் தவறான வழிகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறும் இவர்கள் பிள்ளைகளுக்கு இதில், பெற்றோர்கள் ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்றும் கூறினர்.

இதில் ஏற்படும் காயங்களையும் காரணங்களையும் தள்ளி வைத்து பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்.

எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அதில் தொடர்ந்து மிளிர்வதற்கான முயற்சிகளை விளையாட்டாளர்கள் எடுத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே, அந்த உழைப்புக்கு பலன் இருக்கும்.

அதுவே தங்களை இன்று வெற்றியாளர்களாக உருவாக்கி குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெருமையைச் சேர்த்திருப்பதாகவும் ஷர்மேந்திரனும் குகனும், பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டனர்.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)