சிறப்புச் செய்தி

இறக்குமதி பெர்மிட்- AP ரத்து ; விலையை நிலைநிறுத்துவதற்கு சாதகமாக அமையும்

28/05/2022 08:50 PM

கோலாலம்பூர், 26 மே (பெர்னாமா) -- உணவுப் பொருட்களின் இறக்குமதி பெர்மிட்- APஐ அரசாங்கம் ரத்து செய்திருக்கும் நடவடிக்கை சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலையை நிலைநிறுத்துவதற்கு சாதகமாக அமையும்.

சில தரப்பினர்களுக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி இருக்கும் பட்சத்தில் அதன் விலைகள் அதிகரிப்பதால், AP ரத்து செய்யப்படுவதன் வழி முற்றுரிமை அதிகாரத்தைக் குறைக்கலாம் என்று, மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனமான ஃபொம்கா தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இறக்குமதி பெர்மிட்- AP-யை ரத்து செய்யுமாறு ஃபொம்கா கோரிக்கை விடுத்து வந்துள்ளது.

தற்போது அரசாங்கம் எடுத்திருக்கும் இம்முடிவு சரியானது என்றும் சுமார் ஆறு மாதத்திலிருந்து ஓர் ஆண்டுக்குள் பொருட்களின் விலையை நிலைநிறுத்த வாய்ப்பு உள்ளது என்றும் ஃபொம்கா தலைவர் முனைவர் டத்தோ என். மாரிமுத்து தெரிவித்தார்.

''இதன் வழி, வியாபாரிகளும் சிறந்த மற்றும் தரமான பொருட்களைத் தேர்வு செய்ய முடியும். இது அவர்களின் பொருளாதாரத்திற்கும் சிறந்த நடவடிக்கையாக அமையும்,'' என்றார் அவர்.

AP ரத்து செய்யப்படுவதால் தேவைக்கு அதிகமான பொருட்களும் இருக்காது என்றும் சந்தைகளில் உணவுப் பொருட்களின் விநியோகிப்பை தேர்வு செய்வதில் வியாபாரிகள் சிறந்த முறையைக் கையாளலாம் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இதனிடையே, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வணிகர்களுக்கு உதவித் தொகையை வழங்க முன் வர வேண்டும் என்று கோரிக்கையையும் டத்தோ மாரிமுத்து முன் வைத்துள்ளார்.

''சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வணிகர்களுக்கு அரசாங்கம் நீண்டகால உதவித் தொகையை வழங்க வேண்டும். இது அவர்கள் தங்களது வணிகத்தை நடத்த வழிவகுக்கும்,'' என்றார் அவர்.

எனவே, அரசாங்கம் முடிந்த வரையில் அனைத்து ரக பொருட்களின் இறக்குமதி பெர்மிட்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)